நடிகர், நடிகைகள் படத்தில் நடித்து பணம் சம்பாதிப்பதோடு மட்டும் இல்லாமல், தங்கள் மனதுக்குப் பிடித்த நல்ல காரியங்களுக்கு செலவு செய்து தங்கள் ஈடுபாட்டை தெரிவித்து வருகிறார்கள். அப்படி பல நல்ல விஷயங்களில் தன்னை ஈடுபடுத்தி வரும் நடிகர்களில் விஜய்யும் ஒருவர்.
கஷ்டப்பட்டு வரும் ரசிகர்களுக்கு தன்னால் முடிந்த உதவியை விஜய் செய்து வருகிறார். தற்போது சென்னையில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்திலுள்ள 3 குழந்தைகளை விஜய் சந்தித்து அவர்களுடன் போட்டோ எடுத்துக் கொண்டு ரசிகர்களை நெகிழ வைத்துள்ளார்.
ஆதரவற்ற இந்த 3 குழந்தைகளும் இரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு தங்கள் வாழ்நாளை எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் ஆசை என்ன என அவர்களிடம் கேட்டபோது, நடிகர் விஜய்யை சந்தித்து அவருடன் போட்டோ எடுத்துக் கொள்ள வேண்டுமென சொன்னார்களாம்.
இதை அந்த ஆதரவற்றோர் இல்லத்தைச் சேர்ந்தவர்கள் விஜய்யின் கவனத்திற்கு கொண்டு சென்றிருக்கிறார்கள். இதையறிந்த விஜய் உடனடியாக அவர்களை நேரில் அழைத்து அவர்களுடன் சிறிது நேரம் உரையாடிவிட்டு, போட்டோவும் எடுத்துக் கொடுத்திருக்கிறார். அவரைச் சந்தித்த அந்த 3 குழந்தைகளும் சந்தோஷமாக அந்த நிமிடங்களைக் கழித்திருக்கிறார்கள்.