புற்றுநோய் சிகிச்சை நிபுணர் ஜெயக்குமார் வீடு மீது இன்று அதிகாலை தாக்குதல்; தேசத்துரோகியென அட்டையும் கொழுவினர்

யாழ். போதனா வைத்தியசாலையின் புற்றுநோய் சிகிச்சை நிபுணர் ஜெயக்குமாரின் கந்தர்மடம் சந்தி அரசடி வீதியில் உள்ள வீடு இன்று அதிகாலை 1.30 மணிக்கு திடீரென கடும் தாக்குதலுக்கு உள்ளானது. சந்தேக நபர்களால் கண்ணாடிகள் உடைக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டதுடன் கழிவு ஒயிலும் யன்னல் வழியாக வீட்டுக்குள் ஊற்றி “தேசத் துரோகிகளுக்கு இது தான் தண்டனை’ என்ற வாசகம் அரைக்குறைத் தமிழில் எழுதப்பட்ட அட்டையும் வீட்டின் முன்புறத்தில் மாட்டப்பட்டுள்ளது.

சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இது தொடர்பாக டாக்டர் ஜெயக்குமார் தெரிவிக்கையில்:அதிகாலை 1.30 மணியளவில் உறக்கத்தில் இருந்த வேளை யன்னல் கண்ணாடிகள் உடைக்கப்படும் சத்தம் கேட்டு எழுந்து கூக்குரல் இட்ட போது சந்தேக நபர்கள் தப்பிச் சென்றுவிட்டனர்.

இரு நபர்களே மதிலேறி வந்து இந்தக் கைங்கரியத்தை புரிந்துவிட்டு சென்றுள்ளனர். இது தொடர்பாக பொலிஸாரிடம் முறைப்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ். போதனா வைத்தியசாலையில் அண்மையில் இரும்புக் கேடர்கள், ஜனரேற்றர் என்பன உரிய விதிமுறைகளுக்கு மாறாக வெளியே எடுத்துச்சென்ற விடயத்தை அம்பலப்படுத்துவதில் மருத்துவர் ஜெயக்குமார் முன்னின்று உழைத்திருந்தார்.

இந்தச் சம்பவத்தின் எதிரொலியாகவே தனது வீடு தாக்கப்பட்டிருக்கலாம் என அவர் சந்தேகம் தெரிவித்துள்ளார். யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த 10 ஆயிரம் ரூபாபெறுமதியான இரும்புக் கேடர்களும் 4 லட்சம் பெறுமதியான ஜனரேற்றர் ஒன்றும் உரிய விதிமுறைகளை பின்பற்றாமல் வெளியே எடுத்துச்செல்லப்பட்டு மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினரின் கடும் எதிர்ப்பை அடுத்து மீளக்கொண்டு வரப்பட்டது.இந்தச் சம்பவம் தொடர்பாக போதனா வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவில் கடமையாற்றிவந்த வைத்திய அதிகாரி ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு பணிப்பாளரினால் திடீர் இடமாற்றம் செய்யப்பட்டார்.

இதற்கும் மருத்துவ அதிகாரிகள் சங்கம்கடும் எதிர்ப்பை தெரிவித்திருந்தது. இதனையடுத்து மருத்துவர் இடமாற்றம் சுகாதார அமைச்சினால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இவற்றுக்குப் பின்னரே மருத்துவர் ஜெயக்குமாரின் வீடு தாக்கப்பட்டுள்ளது.மேற்படி சம்பவம் தொடர்பாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் தெரிவிக்கையில், திட்டமிட்ட பழிவாங்கல் நடவடிக்கையாகவே இது கருதப்படுகிறது.

தாக்குதலைக் கண்டித்து வைத்தியசாலையினர் அடையாள பணிப்பகிஷ்கரிப்பு

யாழ்.போதனா வைத்தியசாலையின் புற்றுநோய் வைத்திய சிகிச்சை நிபுணர் ஜெயக்குமாரின் வீட்டின் மீது நடாத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்து யாழ். போதனா வைத்தியசாலையினர் அடையாள பணிப்பகிஷ்கரிப்பினை மேற்கொண்டுள்ளனர்.இவர்களது போராட்டத்திற்கு மத்தியிலும் அவசர சிகிச்சைப் பிரிவு தொடர்ச்சியாக செயற்படும் எனவும் அறிவித்துள்ளனர்.மற்றைய பகுதிகள் எதுவும் செயற்படாது எனவும் அத்துடன் தனியார் மருத்துவ மனைகளும் செயற்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் புதன்கிழமைக்கள் தாக்குதல் தொடர்பிலான சூத்திரதாரிகளை எதிர்வரும் புதன்கிழமைக்குள் கைது செய்யுமாறும், இல்லையேல் எதிர்வரும் வியாழக்கிழமை தொடக்கம் தொடர்ந்து பணிப்பகிஷ்கரிப்பபில் ஈடுபடவுள்ளதாகவும் இலங்கை மருருத்தவ அதிகாரிகள் சங்க யாழ். சங்கத் தலைவர் தெரிவித்துள்ளார்.

தாதியர் சங்கம், சிற்றூழியர் சங்கம், பல்வைத்திய சங்கம், வைத்திய அதிகாரிகள் சங்கம் என்பன இணைந்து இப் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பொலிஸ் பாதுகாப்புக் கோரும் வைத்தியர் நிமலன்

யாழ் போதனா வைத்தியசாலையின் மருத்துவ சங்கத்தலைவரும், வைத்தியருமான நிமலன் பொலிஸ் பாதுகாப்புக் கோரியுள்ளார்.யாழ் போதனா வைத்திய சாலையில் புற்று நோய் வைத்தியராக இருக்கும் வைத்தியர் ஜெயக்குமார் வீட்டில் இன்று அதிகாலை இனந்தெரியாதோரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்தினை அடுத்தே அவர் தனக்கும், தன்னுடைய வீட்டிற்கும் பொலிஸ் பாதுகாப்பைக் கோரியுள்ளார்.

Related Posts