புனேவில் நிலச்சரிவு : நூற்றுக்கும் அதிகமானோர் சிக்கியிருக்கலாம் என்று அச்சம்

இந்தியாவின் மஹராஷ்ட்ரா மாநிலத்தில் புனே அருகிலுள்ள ஒரு கிராமத்தில் புதனன்று விடியற்காலை கடும் மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில், நூற்றுக்கும் அதிகமானோர் சேற்றில் புதையுண்டு இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

landslide_bheemashankar-poone-india

குறைந்தது 30 வீடுகள் சேற்றில் புதைந்திருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.

புனே நகரிலிருந்து சுமார் 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மாலின் கிராமத்தில் ஏற்பட்டுள்ள இந்த நிலச்சரிவில் சிக்கியுள்ளவர்களை மீட்க தேசிய பேரிடர் மீட்புப்படையின் இரண்டு குழுக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன.

மீட்பு பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. மருத்துவ குழுக்களும் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன.

இந்த விபத்து தொடர்பில் தேசிய பேரிடர் படையின் இன்ஸ்பெக்டர் ஜெனரல் சந்தீப் ராய் கூறுகையில், காலை 10:45 மணி அளவில்தான் இந்த சம்பவம் பற்றி அவர்களுக்கு தகவல்கள் வந்ததாக தெரிவித்துள்ளார்.

தற்போது அங்கு உயிர்பிழைத்தவர்களை மீட்கும் பணியில் கவனம் செலுத்திவருவதாகவும், அங்கு ஏற்பட்டுள்ள மொத்த இழப்புகள் குறித்து தற்போது மதிப்பிட இயலாது என்றும் தேசிய பேரிடர் படையின் இன்ஸ்பெக்டர் ஜெனரல் சந்தீப் ராய் தெரிவித்துள்ளார்.

Related Posts