கார்த்திகை மாதம் என்பது இலங்கைத் தமிழர்களைப் பொறுத்த மட்டில் ஒரு புனிதமான மாதமாகும். இதன் புனிதத் தன்மையை சீர்குலைக்கும் வகையில் இம் மாதத்தில் ஒரு புல்லுருவியும் பிறந்துள்ளது என்பதனை அண்மையில் பத்திரிகை வாயிலாக அறிந்துள்ளேன் என யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்துள்ளார்.
திக்கம் இளைஞர் விளையாட்டுக் கழகத்தினால் நடத்தப்பட்ட உதைபந்தாட்டத் தொடரின் இறுதிநாள் நிகழ்வு நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்;
கார்த்திகை மாதம் விசேடத்துக்குரிய புனிதமான மாதமாகும். ஏனெனில் இம்மாதம் 26ஆம் திக எமது தேசியத் தலைவர் பிறந்துள்ளார். இதேபோல் எமது இனத்தின் விடுதலைக்காகப் பேராடி உயிர் நீத்த மாவீரர்களின் நினைவுநாள் கார்த்திகை 27ஆகும். இதனால் இந்த மாதம் புனிதமடைகிறது.
ஆனால் அரசுடன் இணைந்து இணக்க அரசியல் பேசி எம் இனத்தை நசுக்க நினைக்கும் புல்லுருவியும் பிறந்தது இம்மாதம் 10ஆம் திகதி என்பதை அண்மையில் பத்திரிகை வாயிலாக அறிந்தேன்.
தற்போது நான் பங்குபற்றும் நிகழ்வுகளில் இளைஞர் கூட்டமே அதிகமாகக் காணப்படுகின்றது. அதற்கு விளையாட்டுத்தான் காரணமாகவுள்ளது. அண்மையில் பருத்தித்துறையில் நடைபெற்ற உதைபந்தாட்டத்தின் இறுதிநாள் நிகழ்விலும் இன்றைய இறுதிநாள் நிகழ்விலும் இளைஞர்களே அதிகமாகக் காணப்படுகின்றனர்.
இந்த நிகழ்வை திக்கம் இளைஞர்கள் மிகச் சிறப்பாக ஒழங்குபடுத்தியுள்ளனர். இங்கு பல இளைஞர்கள் இருக்கின்றார்கள். நீங்கள் யோசிக்க வேண்டும். தற்போது மாவீரர் நாள் வரப்போகின்றது என்பதால் இராணுவத்தையும், புலனாய்வுப் பிரிவினரையும் வீதிகளில் கொட்டிவிட்டுள்ளார்கள். அவர்கள் எங்கும் ஊடுருவலாம். ஆனால் எம் மனதை ஊடுருவ முடியாது.
அதேபோல் இவர்கள் எத்தனை பேரைக் கொன்று குவித்தாலும் எங்களுக்காக உயிர்நீத்த மாவீரர்களை நினைவு கூருவோம். இங்கு நான் மாவீரர் எனக் குறிப்பிடுவது விடுதலைப் புலிகளையே சாரும்.
தற்போது ஏதாவது சூழ்ச்சி செய்து பல்கலைக்கழக மாணவர்களைக் கைது செய்து பல்கலைக்கழகத்தை மூடிவிட வேண்டும் என எண்ணுகிறார்கள். இதேபோல் விடுவிக்கப்பட்ட போராளிகளைக் கைது செய்யும் நடவடிக்கைகள் நடந்து கொண்டிருக்கின்றன.
எமக்காக உயிர்நீத்தவர்களை மறந்துவிடக்கூடாது. எந்த இடர்களிலும் நாம் இதனை நிச்சயமாகச் செய்ய வேண்டும். இத்துடன் எமது போராட்டம் முடியவில்லை.
அரசியலில் எந்த வழிகளில் எந்த வகையில் போராட முடியுமோ அந்த வகையில் போராடுவோம் என்றார்.