சபரகமுவ பல்கலைக்கழகத் தமிழ் மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதை கண்டித்து சக மாணவர்கள் ஆர்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.
அதேவேளை அவரது கைது குறித்து பெற்றோர், மனித உரிமைகள் ஆணையத்திடம் முறைப்பாடும் செய்துள்ளனர்.
அந்தப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றுவரும் வவுனியா நெடுங்கேணி பிரதேசத்தைச் சேர்ந்த யோகநாதன் நிரோஜன் என்ற மாணவரே பலாங்கொடை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அங்கு கல்வி பயிலும் தமிழ், முஸ்லிம் மாணவர்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேறிவிட வேண்டும் என உயிரச்சுறுத்தல் விடுத்து கொச்சைத் தமிழில் எழுதப்பட்ட எச்சரிக்கை சுவரொட்டிகள் கடந்த ஜுலை மாதம் 20 ஆம் தேதி மாணவர் விடுதி கழிப்பறையில் ஒட்டப்பட்டிருந்தன.
இதேபோன்று கடந்த ஞாயிறன்று அதிகாலை 3 மணியளவில் இத்தகைய சுவரொட்டிகளை முகமூடி அணிந்த நபர்கள் ஒட்டிக்கொண்டிருந்தபோது கழிப்பறைக்குச் சென்ற தமிழ் மாணவன் ஒருவர் தாக்கப்பட்டிருந்தார்.
புதிய சுவரொட்டிகளும் அங்கு ஒட்டப்பபட்டிருந்தது கண்டு பிடிக்கப்பட்டிருந்தது. இந்தச் சம்பவம் தொடர்பாகவே இரண்டாம் வருடத்தில் பயிலும் மாணவன் நிரோஜன் கைது செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
நிரோஜன், விடுதலைப்புலிகளினால் பிடித்துச் செல்லப்பட்டு அவர்களிடமிருந்து தப்பி வந்து குடும்பத்துடன் வசித்து வந்ததாகக் கூறும் அவரது பெற்றோர், யுத்தம் முடிவுக்கு வந்தபின்னர், அந்த இயக்கத்தில் இருந்தவர்கள் அனைவருக்கும் புனர்வாழ்வு அளிக்க வேண்டும் என்ற அரசாங்கச் செயற் திட்டத்திற்கு அமைவாக தமது மகனும் புனர்வாழ்வு பயிற்சி பெற்றிருந்தார் என்றும் தெரிவித்திருக்கிறார்கள்.
அவ்வாறு பயிற்சி பெற்ற பிறகு, இவர் தற்போது சபரகமுவ பல்கலைக்கழகத்தில் பயின்று வருகின்றார்.
கைது செய்யப்பட்ட மாணவன் நிரோஜன் மேல் விசாரணைக்காகக் கொழும்புக்குக் கொண்டு செல்லபட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அத்துடன், அங்கு அவரை, நீதிமன்ற நடவடிக்கைக்கு உட்படுத்தப்படவுள்ளதாகவும், தங்களை உடனடியாகக் கொழும்புக்கு வருமாறு காவல்துறையினர் வியாழன் மாலை அறிவித்ததையடுத்து, தாங்கள் கொழும்புக்குச் செல்வதாகவும் அந்த மாணவனின் தாயார் யோகநாதன் மல்லிகாவதி தெரிவித்தார்.
இந்த கைது குறித்து தகவல் தெரிவித்த காவல்துறை பேச்சாளர் அஜித் ரோகண, இந்தப் பல்கலைக்கழகத்தில் அண்மையில் இடம்பெற்ற சம்பவங்களின் பின்னணியில் இனங்களுக்கிடையில் குரோதத்தை ஏற்படுத்தத்தக்கவகையில் சிலர் செயற்பட்டு வருவது தொடர்பாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த மாணவன் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளதாகக் கூறினார்.
விடுதலைப்புலிகளுடன் இணைந்திருந்து பின்னர் புனர்வாழ்வளிக்கப்பட்ட அந்த மாணவனுடைய கைத்தொலைபேசியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் சில தகவல்கள் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டதையடுத்தே அவர் பங்கரவாதப்புலனாய்வு பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
இந்த விசாரணைகளில் அவர் பயங்கரவாதத்துடன் தொடர்படையவர் என்று கண்டுபிடிக்கப்பட்டால், அவர் நீதிமன்றத்தின் ஊடாக சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவார் என்றும் காவல்துறை பேச்சாளர் அஜித் ரோகண தெரிவித்தார்.