புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலையானோரில் பட்டதாரிகளாக வெளியேறியுள்ள 35 பேருக்கு, முன்னுரிமை அடிப்படையில் நியமனம் வழங்க வேண்டும் எனக் கோரிய பிரேரணை, வட மாகாண சபையில் ஏகமனதாக, நிறைவேற்றப்பட்டுள்ளது.
வட மாகாண சபையின் 66வது அமர்வு வியாழக்கிழமை, அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது, வட மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் இப் பிரேரணையை முன்மொழிந்தார்.
இறுதி யுத்தத்தின் போது சரணடைந்த, கைதுசெய்யப்பட்டு புனர்வாழ்வளிக்கப்பட்ட 35 பேர், பட்டதாரிகளாக தற்போது வெளியேறியுள்ளனர்.
இவர்கள், பல்கலைக்கழகத்துக்குத் தகுதியான போதும் ஒரு சில காரணங்களால் பல்கலைக்கழகக் கல்வியைத் தொடர முடியாதிருந்தனர். தற்போது புனர்வாழ்வின் பின்னர் மேற்படிப்பை முடித்து வெளியேறியுள்ளனர்.
இதற்கமைய யாழ்ப்பாணத்தில் 11 பேர், கிளிநொச்சியில் 12 பேர், முல்லைத்தீவில் 7 பேர், வவுனியாவில் நான்கு பேர், மன்னாரில் ஒருவர் என வட மாகாணத்திலுள்ள 5 மாவட்டங்களிலும் 35 பேர் பட்டதாரிகளாகவுள்ளனர்.
எனவே, இவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் நியமனம் வழங்க வேண்டும் என வடமாகாண சுகாதார அமைச்சர் குறித்த பிரேரணையினை முன்மொழிய, உறுப்பினர் கமலேஸ்வரன் வழிமொழிந்தார்.
பின்னர் சகல உறுப்பினர்களின் ஒப்புதல்களுடன் இந்த பிரேரணை நிறைவேற்றப்பட்டது.