தற்போதைய அரசாங்கத்தினால் விடுவிக்கப்பட்ட புனர்வாழ்வளிக்கப்படாத விடுதலை புலிகளினாலேயே தனது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தெரிவித்துள்ளார்.
அதேநேரம் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவின் பாதுகாப்புச் செயற்பாடுகளை அவரின் வீட்டிற்கே சென்று கோத்தபாய ராஜபக் ஷ சீர் செய்து கொடுத்தாகவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையொன்றிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பை குறைக்குமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ உயர் நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்ததாக அரசாங்க தரப்பு அரசியல் வாதிகள் சிலரால் பரப்பப்படும் கருத்துக்கள் முற்றிலும் பொய்யானவை.
இவை வெறும் பிரபல்யத்திற்கான பிரசாரம் மட்டுமேயாகும். எந்த ஒரு மனுவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவினாலோ அல்லது ஜனாதிபதி செயலாளரினாலோ அல்லது பாதுகாப்பு செயலாளரினாலேயோ தாக்கல் செய்யப்படவில்லை.
இது அரச சார்பற்ற நிறுவனமொன்றினால் தாக்கல் செய்யப்பட்ட தனிப்பட்ட மனுவாகும். முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க பண்டாரநாயக்க தனது பாதுகாப்பு தொடர்பில் கவனமெடுக்குமாறு முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக் ஷவிடம் கேட்ட போது அவர் அவரது வீட்டிற்கே சென்று அவரது சிரேஷ்ட பாதுகாப்பு அலுவலர்களை சந்தித்து பாதுகாப்பு வசதிகளை சரி செய்துவிட்டு வந்தார்.
அவரது பாதுகாப்பு ஒழுங்கு முறைகளில் எவ்விதமான மாற்றங்களும் ஏற்படுத்தப்படவில்லை. அவ்வாறான கோரிக்கைகள் பல தடவைகள் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் சிரேஷ்ட பாதுகாப்பு அலுவலரினால் விடுக்கப்பட்ட போதும் நாம் அதனை உறுதி செய்தோம்.
சில அரசியல் வாதிகள் தமது விம்பத்துக்கு பொருத்தமான வகையில் மக்களிடம் கருத்துகளை பரப்பி வருகின்றார்கள். அது அவர்களின் சொந்த நியாயப்பாடுகளாகும். இந்த அரசாங்கத்திலும் கூட பல தடவைகள் புலிகளின் சதி முயற்சிகள் அரங்கேறியுள்ளன. உதாரணமாக இவ்வருடத்தின் ஆரம்பத்தில் புலம்பெயர் உறுப்பினர் ஒருவர் தமிழரசுக் கட்சியின் பிரதான பாராளுமன்ற உறுப்பினரை தாக்க முற்பட்டிருந்தார்.
அதுமட்டுமல்லாது இரண்டு கிளைமோர் குண்டுகளும் மீட்கப்பட்டிருந்தன. இதுபோன்ற விடுதலை புலிகளின் பயங்கரவாத செயற்பாடுகள் இந்த அரசாங்கத்திலும் தொடர்கின்றன. ஆனால் எனது அரசாங்கத்தில் 11 ஆயிரத்துக்கு மேற்பட்ட விடுதலை புலிகளை புனர்வாழ்வுக்கு உட்படுத்தியிருந்தேன்.
ஒரு சிலரை மட்டுமே எம்மால் புனர்வாழ்வுக்குட்படுத்த முடியாமல் போனது. அவர்கள் பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அவர்களினாலேயே எனது அச்சுறுத்தல் ஏற்படும்.
அந்த வகையில் 30 வருடகால யுத்தத்தினை முடிவுக்கு கொண்டு வந்தவர் என்ற வகையிலும் பயங்கரவாதத்தை முற்றிலும் ஒழித்தவர் என்ற வகையில் தற்போதைய ஜனாதிபதியும் பிரதமரும் எனது பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்.