சீனாவில் புத்தாண்டுக் கொண்டாட்டத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 35 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்தில் 40க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர். சீனாவின் ஷாங்காய் மாகாணத்தில் சென் யி சதுக்கத்தில் புத்தாண்டை வரவேற்கும் விதமாக ஆயிரக்கணக்கானோர் கூடியிருந்தனர்.
புத்தாண்டு பிறக்க அரை மணி நேரம் இருந்தபோது, திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு 35 பேர் உயிரிழந்தனர்.
மேலும், இந்த சம்பவத்தில் 42 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.
சிகிச்சைப் பெற்று வருபவர்களில் பெரும்பாலானோர் மாணவர்கள் எனக் கூறப்படுகிறது.
35 பேர் உயிரைக் குடித்த கூட்ட நெரிசலுக்கான காரணம் என்னவென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். புத்தாண்டுக் கொண்டாட்டத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 35 பேர் பலியான சம்பவத்தால் அப்பகுதி மக்களிடையே சோகம் நிலவுகிறது.