புத்தாண்டுக்கு முன்னதாக வலி.வடக்கில் குடியமர்வு

சித்திரைப் புத்தாண்டுக்கு முன்னதாக வலி.வடக்கில் ஆயிரத்து நூறு ஏக்கர் முழுமையாக விடுவிக்கப்பட்டு அதில் மக்களின் மீள்குடிய மர்வு நடவடிக்கைகள் பூர்த்தியாக்கப்படும். இவ்வாறு யாழ். மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

vetha-nayagan

ஏற்கனவே விடுவிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு மேலதிகமாக 8 கிராம சேவையாளர் பிரிவுகள் விடுவிக்கப்படவுள்ளது.

இந்தப் பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் மிதிவெடி அகற்றல் செயற்பாடுகள் எதிர்வரும் 7 ஆம் திகதி நிறைவுக்கு வரவுள்ளது.

அதன் பின்னர், மேற்படி 8 கிராம சேவையாளர்கள் பிரிவுகளிலும் மீள்குடியமர்வு செயற்பாடுகள் ஆரம்பமாகவுள்ளன. என்றும் அவர் குறிப்பிட்டார்.

வலி.வடக்கு மீள்குடியமர்வு தொடர் பிலான விசேட கலந்துரையாடல், தெல்லிப்பழை பிரதேச செயலகத்தில் நேற்றுக் காலை, அரச அதிபர் தலைமையில் நடத்தப்பட்டது. அதில் பல தரப்பினரும் கலந்து கொண்ட னர்.

ஏற்கனவே முதல் கட்டமாக 430 ஏக்கர் விடுவிக்கப்பட்டுள்ளது. வளலாயில் 233 ஏக்கர், வயாவிளான் கிழக்கு மற்றும் பலாலி தெற்கு இணைந்து 197 ஏக்கர் நிலப்பரப்பு மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

அடுத்த கட்டமாக வளலாயில் மேலும் 195 ஏக்கர் விடுவிக்கப்படவுள்ளது. அத்துடன் காங்கேசன்துறை தெற்கு (ஜே/235), பளைவீமன்காமம் வடக்கு (ஜே/236), பளைவீமன் காமம் தெற்கு (ஜே/237), கட்டுவன் (ஜே/238), தென்மயிலை (ஜே/240), வறுத்தலைவிளான் (ஜே/241), மயிலிட்டி வடக்கு (ஜே/246), தையிட்டி தெற்கு (ஜே/250) ஆகிய கிராம சேவையாளர் பிரிவுகளே பகுதியளவில் அடுத்த கட்டமாக விடுவிக்கப்படவுள்ளன.

இந்தப் பிரதேசங்களில் தற்போது இராணுவத்தினர் மிதிவெடி அகற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். 270 ஏக்கர் மாத்திரம் வரையில் மிதிவெடி அகற்றியுள்ளனர். எஞ்சிய பிரதேசங்களில், எதிர்வரும் 7 ஆம் திகதிக்கு முன்னதாக மிதிவெடி அகற்றல் செயற்பாடு முடிக்கப்படும் என்று தெரிவித்துள்ள இராணுவத்தினர், அதன் பின்னர் மீள் குடிமயர்வு மேற்கொள்ள முடியும் என்று குறிப்பிட்டுள்ளனர்.

இராணுவத்தினரின் மிதிவெடி அகற்றல் செயற்பாடு முடிவடைந்த பின்னர், அரச அதிகாரிகள் குறித்த பிரதேசங்களை நேரடியாகச் சென்று பார்வையிடுவர். அதன் பின்னரே, மக்கள் பதிவு செய்யப்பட்ட பின்னர் மீள்குடியமர்வுக்கு அனுமதிக்கப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts