கௌதம்மேனன் இயக்கத்தில் அஜீத் நடித்து வரும் புதிய படம் ‘என்னை அறிந்தால்’. இப்படத்தில் அஜீத்துக்கு ஜோடியாக அனுஷ்கா, திரிஷா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் பாடல்களை ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் அஜீத் ரசிகர்களுக்கு இந்த புதிய வருடம் இரட்டிப்பு மகிழ்ச்சியுடன் அமர்க்களமாக தொடங்க உள்ளது.
என்னை அறிந்தால் படத்தின் பாடலையும், முன்னோட்டத்தையும் ஜனவரி 1-ஆம் தேதி வெளியிடவிருக்கிறார்கள். இதை படக்குழுவினர் உறுதிப்படுத்தியுள்ளனர். இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளரான ஏ.எம்.ரத்னம் கூறும்போது,
சமீபத்தில் வெளியான ‘என்னை அறிந்தால் ‘ திரைப்படத்தின் அட்டகாசமான டீசர் உலகெங்கும் பரவியதோடு, குறைந்த காலக்கட்டத்தில் அதிகம் பேர் பார்த்த வரலாற்றையும் உண்டாக்கியது.
வருகின்ற ஜனவரி 1-ஆம் தேதி ‘என்னை அறிந்தால்’ படத்தின் இசையுடன் படத்தின் முன்னோட்டமும் வெளிவருவது ரசிகர்களுக்கு பேரானந்தம் தரும். புது வருடத்தன்று ரசிகர்களுக்கு இந்த இரட்டிப்பு பரிசு மகிழ்ச்சி தரும் என்பதில் எங்களுக்கு பெருமை.
படப்பிடிப்பு முடிந்து, மற்ற பணிகள் இறுதி கட்டத்தை எட்டிக்கொண்டு இருக்கிறது. ஜனவரி 1-ஆம் தேதி வியாழக்கிழமை என்பது குறிப்பிடத்தக்கது.
இதை தொடர்ந்து இந்த பொங்கலும் ‘என்னை அறிந்தால்’ வெளியாவதை தொடர்ந்து ரசிகர்களுக்கு மட்டுமின்றி, எல்லா தரப்பு மக்களுக்கும் இனிப்பு பொங்கலாக இருக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை’ என்று பெருமிதத்துடன் கூறினார்.