புத்தரின் போதனையை ஞாபகமூட்டிய சம்பந்தன்! – பூரிப்பில் பிரதமர் ரணில்

புத்தரின் போதனைக்கு அமைய நாடாளுமன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் தனக்கு ஞாபகமூட்டினார் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்றுத் தெரிவித்தார்.

புத்தரின் போதனைக்கு அமைய செயற்படாமல் விகாரைகளுக்குச் செல்வதிலும் பலனில்லை என்றும், விகாரைகளுக்கு செல்வதால் மட்டும் பௌத்தர் ஆகிவிட முடியாது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

பத்தரமுல்லையிலுள்ள வோட்டர்ஸ் ஏஜ் ஹோட்டலில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற அரசமைப்பு தொடர்பான கருத்தரங்கை ஆரம்பித்துவைத்து உரையாற்றியபோதே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேற்கண்ட விடயங்களைக் குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நாடாளுமன்றத்தைப் பலப்படுத்தி அனைத்துக் கட்சிகளும் பங்கேற்கக்கூடிய முறைமையை உருவாக்க வேண்டும். இதற்கமைய தேர்தல் முறைமை குறித்து நாம் சிந்திக்க வேண்டும். அதற்கான பேச்சுகள் கட்சித் தலைவர்களுடன் இடம்பெற்று வருகின்றன.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் ஒவ்வொரு நாடாளுமன்ற முறைமை பின்பற்றப்படுகிறது. நாம் புத்தரின் போதனைக்கு அமைய எமது நாடாளுமன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இதை எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் கடந்த வாரம் எனக்கு ஞாபகமூட்டினார். தேசிய சட்டப்பேரவையின் நிகழ்வொன்றின்போதே அவர் இதை ஞாபகப்படுத்தினார்.

புத்தரின் போதனைக்கு அமைவான லிச்சவி ஆட்சி முறைக்கு அமைய சமாதானமாக ஒன்றுகூடி, சமாதானமாக கலந்துரையாடி, சமாதானமாக கலைந்து செல்ல வேண்டும். இல்லாவிட்டால் அவர் பௌத்தராக இருக்க முடியாது. அதுமட்டுமல்ல, இந்துவாகவும், இஸ்லாமியராகவும், கிறிஸ்தவராகவும் இருக்க முடியாது.

புத்தரின் போதனைக்கு அமைய செயற்பட முடியாவிட்டால் விகாரைகளைக் கட்டுவதிலும், விகாரைகளுக்குச் செல்வதிலும் பலனில்லை. விகாரைகளுக்கு செல்வதால் மட்டும் பௌத்தர் ஆகிவிட முடியாது. புத்தரின் போதனைக்கு அமைய சமாதானமாக ஒன்றுகூடி, சமாதானமாக கலந்துரையாடி, சமாதானமாக கலைந்து செல்ல வேண்டும். அவ்வாறாதொரு நாடாளுமன்றத்தை நாம் உருவாக்க வேண்டும். உண்மையான பௌத்தர் யார் என்பதை இந்த நாடாளுமன்றத்தினூடாக தெரிந்துகொள்ளலாம்” – என்றார்.

Related Posts