ஒரு வீட்டுக்குள் வடக்கு அறையில் அழுகுரல்கள் கேட்கின்றன., தெற்குஅறையில் வெற்றிக்கோஷங்கள் கேட்கின்றன, அப்படியாயின் அந்த வீட்டுக்குள் வடக்கும்- தெற்கும் ஒன்றாக இருக்க முடியுமா? என வடக்கு மாகாண சபை உறுப்பினர் பா. கஜதீபன் கேள்வியெழுப்பியுள்ளார்.
நல்லூர் தெற்கு சனசமூகநிலையத்தின் 65ஆவது ஆண்டுவிழா நேற்று சனசமூக நிலைய மைதானத்தில் யாழ்.மாநகரசபை சனசமூக நிலையங்களின் தலைவர் திரு.க.நாகேந்திரம் தலைமையில் இடம்பெற்றது.
இவ்விழாவில் பிரதம விருந்தினராகக்கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்…
ஒரு வீட்டுக்குள் வடக்கு அறையில் அழுகுரல்கள் கேட்கின்றன, தெற்குஅறையில் வெற்றிக்கோஷங்கள் கேட்கின்றன, அப்படியாயின் அந்த வீட்டுக்குள் வடக்கும்- தெற்கும் ஒன்றாக இருக்க முடியுமா? அதிலும் வடக்கின் அழுகுரல்களுக்குக் காரணமாக இருந்த தெற்குப்பகுதியினரே , வடக்கின் சோகங்களை அனுஷ்டிக்க விடாமல், தடுத்து தமது வெற்றியை, பலாத்காரமாக அனுஷ்டிக்க வேண்டுமென நிர்ப்பந்தித்துக்கொண்டிருப்பது தான் இன்றைய நாட்டின் நிலைமை.
இன்று சிங்கள பௌத்தர்களின் புனித நாள். அமைதியாக தர்ம சிந்தனைகளோடு வாழும் வழிமுறையை உலகிற்கு வழங்கியதில் பௌத்தத்திற்கு முக்கிய இடம் உண்டு.
ஆனால் அதன் வழி வந்தவர்களாகத் தங்களைக்கூறிக் கொள்ளும் ஆட்சியாளர்கள் எவ்வாறு நடந்து வந்திருக்கின்றார்கள், எவ்வாறு நடந்துகொள்கிறார்கள் என்பதைத்தான் நாங்கள் அனுபவ ரீதியாக கண்டுகொண்டிருக்கின்றோம்.
கடந்த 66 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சியாளர்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் உண்மையான பௌத்த சிந்தனைகளுடன் முற்று முழுதாக முரண்பட்டு வருகின்றன.
பௌத்த சிந்தனைகளை போதித்த புத்தபகவான் இன்று இருந்திருந்தால், தனது கொள்கைகளைப்பின்பற்றுவதாகச்சொல்லும் ஆட்சியாளர்கள் செய்யும் அக்கிரமங்களைப்பார்த்து தானாகவே வெட்கித்தலைகுனிந்திருப்பார்.
இந்த மே மாதம் பௌத்தர்களுக்கு எவ்வாறு முக்கியத்துவமானதோ, புனிதமானதோ, அவ்வாறே தமிழர்களாகிய எங்களுக்கும் மிகவும் புனிதமானதும், உணர்வுபூர்வமானதுமான மாதமாகும்.
அதுவும் இந்த வாரம் மிகவும் உண்ர்வு பூர்வமான வலிசுமந்த வாரமாகும். கடந்த இறுதிப்போரிலே இலட்சக்கணக்கில் , கடற்கரை ஓரத்தில் கொன்றுகுவிக்கப்படதொரு மாதமாகும். அதில் கொல்லப்பட்ட மற்றும், காயமடைந்த எமதுமக்களின் உறவினர்கள் இன்று அவர்களை நினைத்து ஒருசொட்டு கண்ணீர் கூட விட முடியாதபடி , அரசாங்கம் அவர்களை அச்சுறுத்திவருகின்றது.
எனினும் தெற்கில் எமது மக்களின் அவலங்களின் மேல் பெறப்பட்ட இராணுவ வெற்றியை கோஷங்களுடன் கொண்டாடுவதுடன், பாதிக்கப்பட்ட எமது மக்களையும் அதைக்கொண்டாடுமாறு பலாத்காரமாக நிர்ப்பந்தித்து வருகின்றது.
இந்த விடயமானது ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்படமுடியாத ஒரு நிலையாகும். இது பௌத்த மதம் கூறும் போதனைகளுக்கு எவ்வித்ததிலும் ஒவ்வாத ஒன்றாகும் என அவர் மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் யாழ்.மாவட்ட விளையாட்டு அதிகாரி ஆர்.மோகனதாஸ், யாழ்.பல்கலைக்கழக உடற்கல்வி விரிவுரையாளர், எம்.இளம்பிறையன்ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர். இந்நிகழ்வில் பல கலைநிகழ்வுகளும் இடம்பெற்றதுடன், பொது மக்களும் கலந்து கொண்டனர்.