புத்தரின் உருவப்படம் பொறித்த சேலை அணிந்திருந்த பெண் சட்டத்தரணி : நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு

புத்தரின் உருவம் பொறித்த அலங்காரம் அமைப்புக்கொண்ட சேலை அணிந்திருந்த இளம் பெண் சட்டத்தரணி ஒருவரை வாக்குமூலம் வழங்க வருமாறு யாழ்ப்பாண நீதிமன்ற வளாகத்துக்குள் வந்து யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதால் நீதிமன்ற வளாகத்தக்குள் பரபரப்பு ஏற்பட்டது.

எனினும் மூத்த சட்டத்தரணிகள் தலையிட்டு நிலமையை சுமுக நிலைக்குக் கொண்டு வந்தது. அத்துடன், பொலிஸாரால் அடையாளப்படுத்தப்பட்ட இளம் பெண் சட்டத்தரணி, யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்துக்குச் சென்று வாக்குமூலம் வழங்கினார்.

“இந்தியாவிலுள்ள உறவினர் ஒருவரால் எனக்கு செலை ஒன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அதில் புத்த பெருமானுடைய உருவம் பொறிக்கப்பட்டுள்ளது என்று நான் அறிந்திருக்கவில்லை. புத்தரை அவமதிக்கும் எண்ணத்தில் நான் அந்தச் சேலையை அணிந்திருக்கவில்லை” என்று இளம் பெண் சட்டத்தரணி தனது வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த சார்ஜன்ட் தர நிலை பொலிஸ் அலுவலகர் உள்ளிட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் சிலர், நேற்று முற்பகல் யாழ்ப்பாணம் நீதிமன்ற வளாகத்துக்குள் வருகை தந்தனர். அவர்கள் சட்டத்தரணிகளின் நூலகத்துக்கு அருகில் சென்று, புத்தரின் உருவம் பொறித்த சேலை அணிந்து வந்த சட்டத்தரணி ஒருவரைத் தேடுவதாகத் தெரிவித்தனர்.

பொலிஸ் அவசர இலக்கமான 119இற்கு வந்த முறைப்பாட்டின் அடிப்படையில் தாம் அந்தச் சட்டத்தரணியிடம் வாக்குமூலம் பெற்றுக்கொள்ளவேண்டும் – அவரைப் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லவேண்டும் என்று அங்கிருந்த சட்டத்தரணிகளிடம் பொலிஸார் தெரிவித்தனர்.

எனினும் பெண் சட்டத்தரணி ஒருவரை விசாரிப்பதற்கு பெண் உப பொலிஸ் பரிசோதகரே வரவேண்டும் என சட்டத்தரணிகளால் எடுத்துக் கூறப்பட்டது. அதனால் அங்கு வந்திருந்த பொலிஸார் திரும்பிச் சென்றனர்.

சிறிது நேரத்தில் பெண் உப பொலிஸ் பரிசோதகர், 2 பெண் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் ஆண் பொலிஸ் உத்தியோகத்தர் என நால்வர் நீதிமன்ற வளாகத்திலுள்ள சட்டத்தரணிகளின் நூல் நிலையத்துக்கு வருகை தந்தனர்.

அதன்போது, மூத்த சட்டத்தரணி மு.றெமிடியஸ் உள்ளிட்டோர் தலையிட்டு, “உங்களால் தேடுப்படும் பெண் சட்டத்தரணி, வேறொரு நீதிமன்றுக்குச் சென்றுள்ளார். அவர் வருகை தந்ததும் வாக்குமூலம் வழங்குவார்” என பெண் உப பொலிஸ் பரிசோதகரிடம் தெரிவித்தனர். அதனால் பொலிஸ் உத்தியோகத்தர்கள் அந்த இடத்திலிருந்து நகர்ந்தனர்.

இந்த நிலையில் நீதிமன்ற வளாகத்துக்குள் வருகை தந்த சம்பந்தப்பட்ட பெண் சட்டத்தரணியை யாழ். மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத் தலைவியான ஜனாதிபதி சட்டத்தரணி சாந்தா அபிமன்யுசிங்கம் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்துக்குச் சென்று வாக்குமூலம் வழங்க வைத்தார்.

எனினும் பெண் சட்டத்தரணி, பொலிஸ் நிலையத்துக்குச் சென்றிருந்த வேளை புத்தரின் உருவம் பொறித்த சேலையை அணித்திருக்கவில்லை.

இதேவேளை, புத்தரின் உருவம் பொறித்த சேலைகள் பல நாடுமுழுவதுமுள்ள புடவைக் கடைகளில் பொலிஸாரால் அண்மையில் பறிமுதல் செய்யப்பட்டன. கடந்த ஆண்டு திருகோணமலையிலுள்ள புடவைக் கடையில் புத்தரின் உருவம் பொறித்த சேலைகள் மீட்கப்பட்டதுடன் அந்த புடவையக உரிமையாளர் நீதிமன்றில் தண்டம் செலுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts