புதுவை இரத்தினதுரையும் இன்குலாபும் கவிதைப் போராளிகள். உணர்வால் ஒருமித்தவர்கள். சமூக ஒடுக்குமுறைகளுக்கும் இன ஒடுக்குமுறைகளுக்கும் எதிராகத் தங்கள் கவிதைகளை ஆயுதமாகப் பயன்படுத்தியவர்கள். கவிஞர் புதுவை இரத்தினதுரையைப் போன்றே கவிஞர் இன்குலாபும் விடுதலைப் புலிகளை ஆழமாக நேசித்தவர். விடுதலைப்புலிகளை எவ்வித நிபந்தனையும் இல்லாமல், நிறை குறைகளோடு ஏற்றுக் கொண்டவர் என்று வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.
அண்மையில் மறைந்த தமிழகக் கவிஞர் இன்குலாபின் நினைவேந்தல் நிகழ்ச்சி கடந்த திங்கட்கிழமை (12.12.2016) யாழ்ப்பாணம் நாவலர் மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அமைச்சர் பொ.ஐங்கரநேசன் இவ்வாறு தெரிவித்திருந்தார்.
அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
தமிழ்நாட்டில் ஈழத்தமிழர்களுக்காகக் குரல் கொடுத்து வருகின்ற அரசியல் பிரமுகர்களையே நாங்கள் தெரிந்து வைத்திருக்கிறோம். எங்களுக்காகத் தீயில் கருகியவர்களைப் பற்றியோ, எமது போராட்டத்தின் நியாயங்களைத் தமிழகத்தின் பட்டி தொட்டியெல்லாம் எடுத்துச் சென்ற பரப்புரையாளர்கள் பற்றியோ நாம் ஆர்வம் காட்டுவதில்லை. அவர்களை நினைவிற் கொள்ள வேண்டியது எங்களது கடமைகளில் ஒன்று. அந்த வகையிலேயே மக்கள் கவிஞர் இன்குலாபிற்கான நினைவேந்தல் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கவிஞர் புதுவை இரரத்தினதுரையும் கவிஞர் இன்குலாபும் அவர்களது கவிதைகளாலேயே மக்களிடம் பிரபல்யம் பெற்றவர்கள். தங்கள் கவிதைகளின் ஊடாகவே தங்களுடைய கொள்கைகளையும் கருத்துகளையும் மக்களிடம் எடுத்துச் சென்றவர்கள். ஆனால், கொள்கைகளைப் பேச முற்பட்டதால் அக்கொள்கைகளை ஏற்றுக் கொள்ளாதவர்கள் இவர்களது கவிதைகளில் அழகியல் இல்லை என்றார்கள். இவர்களது கவிதைகளைக் கவிதைகளே இல்லையெனவும் வெறும் பிரசார எழுத்துகள் என்றும் விமர்சித்தார்கள்.
விமர்சனங்களாலோ, அல்லது அதிகார மையங்கள் இவர்கள்மீது மேற்கொண்ட அடக்கு முறைகளுக்குப் பணிந்தோ இவர்கள் தங்கள் கொள்கைகளில் சமரசங்கள் செய்து கொள்ளவில்லை. கவிஞர் புதுவை இரத்தினதுரை, தனது கவிதைகளின் தேவை எப்போது முடிவுறுகின்றதோ அப்போது காலம் தன்னைக் கைவிட்டுவிடும் என்றார். கவிஞர் இன்குலாப் தனது நிறத்திலும் மணத்திலும் தான் பூத்துக் கொண்டிருக்கிறேன்; இந்த மண்ணின் ஏதோ ஒரு மூலையில் தான் கருகுமட்டும் பூப்பேன் என்றார். இவர்களைப்போன்று கொள்கைகளுடன் சமரசம் செய்து கொள்ளாத, கவிதைகளைப் போர்க் கருவிகளாகப் பயன்படுத்தக்கூடிய கவிஞர்களுடைய தேவை எங்களுக்கு இன்னமும் நீடித்துக் கொண்டேயிருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.
யாழ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் நா.சண்முகலிங்கன் நினைவுச் சுடரேற்றி ஆரம்பித்து வைத்த நினைவேந்தல் நிகழ்ச்சியில் கவிஞர் சோ.பத்மநாதன், இலக்கியத் திறனாய்வாளரும் சமூகச் செயற்பாட்டாளருமான தெ.மதுசூதனன், கவிஞர் கை.சரவணன் ஆகியோரும் உரையாற்றினார்கள்.