புதுவருட பின்னிரவில் பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல்: நால்வர் கைது

புத்தாண்டு பின்னிரவில் வீதியால் சென்ற பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த குற்றச்சாட்டில் நான்கு இளைஞர்களை பெங்களுர் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது, கர்நாடகா மாநிலம் பெங்களுர் நகரில் உள்ள கம்மனஹல்லி பகுதியில், புத்தாண்டு இரவில் வேலை முடிந்து வீடு திரும்பிய பெண்ணொருவரை வாகனத்தில் பின் தொடர்ந்த இளைஞர்கள், அவரை தடுத்து நிறுத்தி பாலியல் துன்புறுத்தல் கொடுத்துள்ளனர்.

அவர்களிடமிருந்து தப்பிக்க அந்தப் பெண் குரல் கொடுக்க அவரை கீழே தள்ளிவிட்டு அந்த இளைஞர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். இந்தக் காட்சி அந்த வீதியின் அடுக்குமாடி குடியிருப்பிலுள்ள சிசிடிவி கமராவில் பதிவாகியாகியிருந்தது.

இதனை அடிப்படையாகக் கொண்டு இதில் சம்பந்தப்பட்ட இளைஞர்களை பொலிஸார் தேடி வந்தனர். இந்த நிலையில் இந்த பாலியல் குற்றச்செயல் தொடர்பாக நான்கு இளைஞர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இதுகுறித்து பெங்களுர் பொலிஸ் ஆணையாளர் பிரவீன் சூட் தெரிவிக்கையில், ‘கைது செய்யப்பட்ட நான்கு இளைஞர்களில் இருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட பெண் வாடிக்கையாக செல்லும் ஹொட்டலில் வேலை செய்து வந்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட பெண் ‘ஒன்லைன்’ மூலம் தருவிக்கும் உணவுகளை இந்த இளைஞர்கள் தான் அவரது இல்லத்துக்கு சென்று வழங்கியுள்ளனர் என்பது விசாரணையில் தெரிய வந்தது.

கடந்த ஒரு வார காலமாகவே அந்த இளைஞர்கள் அந்தப் பெண்னை பின் தொடர்ந்து வந்துள்ளனர். சம்பவ தினத்தன்று அந்தப் பெண் அதே ஹொட்டலில் உணவு சாப்பிட்டுவிட்டு வீடு திரும்பியிருக்கிறார். இதனை பயன்படுத்தி அந்தப் பெண்ணுக்கு அந்த இளைஞர்கள் பாலியல் துன்புறுத்தல் அளித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட ஏனையவர்களில் ஒருவர் வாகன சாரதி, மற்றொருவர் கல்லூரி மாணவர் ஆவார். சிசிடிவியில் பதிவான காட்சியின் மூலம் குற்றவாளிகள் விரைவாக பிடிக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடன் ஒப்புதல் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது- என்றார்.

இதேவேளை, இச்சம்பவத்திற்கு இந்தியா தழுவிய ரீதியில் பல எதிர்ப்புக்கள் கிளம்பியுள்ளதுடன், பெண் செயற்பாட்டாளர்கள் பலரும் தமது கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.

Related Posts