கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கறுப்பு ஆடை அணிந்து கவனயீர்ப்பை முன்னெடுத்துள்ளனர்.
கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் ஆரம்பிக்கப்பட்டு நேற்று வெள்ளிக்கிழமை 54 ஆவது நாளாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சித்திரை புதுவருடத்தில் கறுப்பு ஆடை அணிந்தும் கறுப்பு கொடிகளை ஏந்தியவாறு தங்களது கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டனர்.
சித்திரை புதுவருட பிறப்போடு தங்களுக்கு நல்தொரு செய்தி கிடைக்க வேண்டும் என்றும். அடுத்த வருடத்திலாவது தங்களின் உறவுகளோடு புதுவருட நிகழ்வை கொண்டாடுவதற்கு வழிசமைக்க வேண்டும் என்றும் தெரிவிக்கும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்ட எங்களுடை அரசியல்வாதிகள் அனைவரும் ஒன்றிணைந்து எங்களுக்கு நல்லதொரு தீர்வை வழங்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
எங்களுடைய தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபையினர் எங்களோடு வந்து இணைந்து போராட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள்.
இன்று சித்திரைபுதுவருட பிறப்பில் அனைவரும் தங்கள் தங்கள் குடும்பங்களோடு வருடப் பிறப்பு நிகழ்வை கொண்டாடிக்கொண்டிருக்க நாங்கள் எங்களின் உறவினர்களுக்காக வீதியில் போராடிக்கொண்டிருகின்றோம் இந்த நிலைமை மாறவேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை முல்லைத்தீவு கேப்பாபுலவில் நில மீட்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்கள் புதுவருடத்தை துக்க தினமாக அனுஷ்டித்துள்ளதுடன்,கறுப்பு கொடிகளை ஏந்தி போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
தமது சொந்த நிலத்தில் தம்மை மீள்குடியேற்றுமாறு வலியுறுத்தி கடந்த மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் மக்கள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
கேப்பாபுலவு இராணுவ தலைமையகத்திற்கு முன்பாக அமைத்துள்ள கூடாரங்களில் கறுப்பு கொடிகளை பறக்கவிட்டு, போராட்டத்திலும் மக்கள் ஈடுபட்டுனர்.
பட்டாசு கொளுத்தும் கையில் கறுப்பு கொடியா? எமது நிலம் எமக்கு வேண்டும், இராணுவமே வெளியேறு உள்ளிட்ட பல்வேறு கோஷங்களை எழுப்பியவாறு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மக்களின் குடியிருப்பு நிலங்களை ஏன் இராணுவத்தினர் அபகரித்துகொண்டு, மாதிரி கிராமங்களில் மக்கள் வாழ்வாதாரத்திற்காக போராடுவதாகவும், மக்களின் கண்ணீருக்கு அரசாங்கம் பதிலளிக்க வேண்டும் எனவம் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.