புதுமாத்தளன் கடற்பரப்பில் தென்பகுதி மீனவர்கள் அடாவடி: தமிழ் மீனவர்கள் இருவர் காயம்!

புதுமாத்தளன் சாலை கடற்பரப்பில் கடற்தொழிலில் ஈடுபட்டிருந்த பிரதேச மீனவர்களின் படகுகள் மீது தென்பகுதி மீனவர்களின் படகுகள் மோதியதில் புதுமாத்தளன் பிரதேச மீனவர்கள் இருவர் காயமடைந்துள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்று (புதன்கிழமை) அதிகாலை இடம்பெற்றுள்ளது. சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

புதுமாத்தளன் தொடக்கம் சாலை பருத்தித்துறை வரையான கடற்பகுதியில் தென்பகுதியிலிருந்து வருகை தந்த மீனவர்கள் சட்டவிரோதமான தொழில் முறைகளை மேற்கொண்டு கடலட்டை பிடிக்கும் தொழிலில் ஈடுபட்டுவருகின்றனர்.

இதன் காரணமாக குறித்த பிரதேசங்களை சொந்த இடமாக கொண்டு உரிய முறையில் தொழிலை மேற்கொண்டுவரும் மீனவர்கள் நீண்ட நாட்களாக பல இடங்களுக்கு முகங்கொடுத்துவருகின்றனர்.

இந்த நிலையில் அதிகாலை 5 மணியளவில் கடலில் சமிக்கை விளக்குடன் படகில் தொழிலினை மேற்கொண்டிருந்த புதுமாத்தளன் சகாயமாத கடற்தொழிலாளர் கூட்டுறவுச்சங்கத்தினை சேர்ந்த மீனவர்களின் படகு ஒன்றின்மீது சட்டவிரோத தொழிலில் ஈடுபடும் தென்பகுதி மீனவர்களின் படகு மோதி விபத்துக்குள்ளாக்கியது.

இதனால் தொழில் ஈடுபட்டிருந்த பிரதேச மீனவர்கள் இருவர் காயமடைந்ததோடு படகிற்கும் பாரிய அளவில் சேதமடைந்துள்ளது.

மீனவர்களின் படகை மோதித்தள்ளிவிட்டு உயிருக்காக போராடிய மாத்தளன் பிரதேச மீனவர்களை காப்பாற்றாமல் தென்பகுதி மீனவர்கள் தப்பி சென்றுள்ளனர்.

உடனடியாக குறித்த அனர்த்தத்தை உணர்ந்த அருகிலிருந்து தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த சக மீனவர்களால் காயமடைந்த இரு மீனவர்களும் உடனடியாக காப்பாற்றப்பட்டு கரைக்கு கொண்டு செல்லப்பட்டதோடு உடனடியாக வடக்கு மாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களின் கவனத்துக்கு இந்த பிரச்சினையை தெரியப்படுத்தினர்.

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த ரவிகரன் நேரடியாக குறித்த மீனவர்களின் நிலையினைப் பார்வையிட்டதோடு தனது கண்டனங்களையும் வெளியிட்டிருந்தார்.

Related Posts