புதுபடங்கள் டிவிடியாக வீடுகள் தோறும் சப்ளை – சேரனின் புது திட்டம்!

டைரக்டர் சேரன் புதுபடங்களை டி.வி.டி மூலம் வீடுகள் தோறும் சப்ளை செய்யும் புதுதிட்டத்தை துவங்கியுள்ளார். இதற்கு ‘சினிமா டூ ஹோம்’ என்று பெயர் வைத்துள்ளார்.

seran

டி.டி.எச்., இன்டர்நெட், கேபிள் டி.வி., மொபைல், டி.வி.டி. உள்ளிட்ட பல வழிகளில் வீடுகளுக்கு புதுபடங்களை நேரடியாக கொண்டு செல்லும் வகையில் இத்திட்டம் தயாராகியுள்ளது. இதுகுறித்து சேரன் கூறும் போது, ‘

நான் இயக்கிய ’ஜே.கே. எனும் நண்பனின் வாழ்க்கை’ படம் தணிக்கை சான்றிதழ் பெற்று 8 மாதங்களாகியும் ரிலீஸ் செய்ய முடியவில்லை. எனவே தான் இதை துவங்கியுள்ளேன் என்றார்.

நடப்பாண்டில் 298 படங்கள் தணிக்கை செய்யப்பட்டு 159 படங்கள் தான் ரிலீசாகியுள்ளது. மீதி படங்களுக்கு தியேட்டர்கள் கிடைக்காமல் முடங்கியுள்ளன. சேரனின் புதுதிட்டம் மூலம், இப்படங்களுக்கு விடிவுகாலம் ஏற்பட்டு உள்ளது.

புது டி.வி.டி.க்களை வீடுகளுக்கு சப்ளை செய்யும் போது தியேட்டர்களிலும், திரையிடப்படும். தமிழகம் முழுவதும் இதற்காக 7 ஆயிரம் முகவர்கள் நியமிக்கப்படுகின்றனர். ஒவ்வொரு முகவரின் கீழே 4 ஆயிரம் குடும்பங்கள் இருக்கும்.

முதல் கட்டமாக ஜே.கே. எனும் நண்பனின் வாழ்க்கை, ஆள், சிவப்பு எனக்கு பிடிக்கும் மேகா, அப்பாவின் மீசை, வேல்முருகன் போர்வெல்ஸ் ஆகிய படங்கள் ‘சினிமா டூ ஹோம்’ முறை மூலம் வீடுகளுக்கு கொண்டு செல்லப்படுகின்றன.

இதன் மூலம் தயாரிப்பாளர்களுக்கு கூடுதல் பணம் கிடைக்கும். காமராஜர் அரங்கில் நடந்த இத்திட்டத்தின் அறிமுக விழாவில் பாலசந்தர், பாரதிராஜா, கே.ஆர்., சீமான், ராம் உள்ளிட்டோர் பங்கேற்று வாழ்த்தி பேசினர். கமலஹாசனும் இந்த புது முயற்சிக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

Related Posts