முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பகுதியில் தனியார் காணி ஒன்றில் விடுதலைப்புலிகளால் புதைக்கப்பட்டதாக நம்பப்படும் கைத்துப்பாக்கிகள் இருப்பதாக தெரிவித்து அதனை தோண்டும் நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்படடது.
முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற உத்தரவிற்கு அமைய (08.02.2023) நேற்று மாலை தோண்டும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
புதுக்குடியிருப்பு கிழக்கு பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றில் விடுதலைப்புலிகளால் அதிகளவிலான கைத்துப்பாக்கிகள் புதைக்கப்பட்டதாக இராணுவ புலனாய்வாளர்களுக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய நீதிமன்ற உத்தரவு பெறப்பட்டு கனரக வாகனம் கொண்டு தோண்டும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா முன்னிலையில் கிராம அலுவலகர்,பொலிஸார்,இராணுவத்தினர், சிறப்பு அதிரடிப்படையினர், தடையவியல் பொலிஸார் முன்னிலையில் தோண்டும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது சுமார் பத்து அடி ஆழம் வரை தோண்டியும் தண்ணீர் ஊறத்தொடங்கியதை தொடர்ந்து குறித்த பகுதியில் தோண்டும் நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவிற்கு அமைய குறித்த பகுதி தோண்டப்பட்ட போதும் எதுவும் கிடைக்காத நிலையில் மூடப்பட்டுள்ளது.