புதுக்குடியிருப்பு நகரமே அதிர்ந்தது என்று குறிப்பிடும் அளவுக்கு நேற்று திங்கட்கிழமை (01.05.2017) புதுக்குடியிருப்பில் நடைபெற்ற கூட்டுறவாளர்களின் மேதினப் பேரணியில் பல்லாயிரக்கணக்கான கூட்டுறவாளர்கள் கலந்து கொண்டிருந்ததோடு நூற்றுக்கணக்கான ஊர்திகளும் பங்கேற்றிருந்தன.
வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் கொடி அசைத்துத் தொடக்கி வைக்க புதுக்குடியிப்பு சிவன்கோவில் முன்றலில் இருந்து பிற்பகல் 3.00 மணிக்கு ஆரம்பித்த மேதினப் பேரணியில் வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலிருந்தும் பல்வேறு கூட்டுறவு அமைப்புகளைச் சேர்ந்த கூட்டுறவாளர்களும், பணியாளர்களும், தொழிற்சங்கத்தினரும் பெரும் படையெனத் திரண்டிருந்தார்கள்.
இவர்களுக்கு ஆதரவாக விவசாயிகள், வர்த்தகர்கள், தமிழ்தேசிய உணர்வாளர்கள் எனப் பல்வேறு தரப்பினரும் பங்கு கொண்டிருந்தார்கள்.
மேதினப் பேரணி புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரியின் பொன்விழா மண்டபத்தைச் சென்றடைந்ததும், அங்கு முல்லைத்தீவு மாவட்டக் கூட்டுறவுச் சபைத் தலைவர் செ.இரத்தினம் தலைமையில் மேதினப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிவசக்தி ஆனந்தன், சிவஞானம் சிறிதரன், கூட்டுறவு அமைச்சர் பொ.ஐங்கரநேசன், மாகாணசபை உறுப்பினர்கள் அனந்தி சசிதரன், து.ரவிகரன் ஆகியோரும் கூட்டுறவு அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டு உரையாற்றினார்கள். வடமாகாணசபை உறுப்பினர்கள் சு.பசுபதிப்பிள்ளை, க.சிவநேசன், ம.தியாகராஜா, இ.இந்திரராஜா, ஆ.புவனேஸ்ரன், க.சிவாஜிலிங்கம், பா.கஜதீபன் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தார்கள்.
வடக்கிலும் கிழக்கிலும் காணிகளைப் படையினரிடம் பறிகொடுத்தவர்களும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளும் போராட்டங்களை முன்னெடுத்துவரும் நிலையில், இவர்களின் கோரிக்கைகளை பிரதிபலிக்கும் விதமாகவே கூட்டுறவாளர்களின் மேதினமும் அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.