புதிய வரவு செலவுத்திட்டம் இளைஞர்களுக்கு இனிப்பானதாக அமையும்! : மங்கள

“2018ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டம், இளைஞர்களுக்கு இனிப்பானதாக அமையும்” என நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார். இணைய ஊடகவியலாளர்களுடனான கலந்துரையாடல், ஊடக அமைச்சின் கேட்போர் கூட்டத்தில் இடம்பெற்றபோதே, அமைச்சர் மேற்படி தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

“கொடும் பிடிக்குள் சிக்கியிருந்த ஊடகத்துறைக்கு, இப்போது அதிகமாகவே சுதந்திரம் கொடுக்கப்பட்டிருக்கின்றது. அந்தச் சுதந்திரத்தைச் சிலர் முறையாகப் பயன்படுத்துகின்றபோதிலும், பலர் அதனை இனவாதப் பரப்புரைக்கும் மதவாதத் தூண்டுதலுக்குமே பயன்படுத்துகின்றனர்.

“எந்தவிதமான எதிர்க்கருத்துகளையும் நாங்கள் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறோம். அனைத்து விமர்சனங்களும் எம்மை வளப்படுத்த உதவும். ஆகையால், எதனையும் எதிர்கொள்ளத் தயாராகவே இருக்கிறோம்.

“சுதந்திரம் அடைந்ததன் பின், தெற்காசியாவின் வளம்மிக்க நாடாகத் திகழுமென எதிர்பார்க்கப்பட்ட இலங்கை, பின்னடைவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. இது பற்றி இளைஞர்கள் சிந்திக்க வேண்டும். நாட்டை எவ்வாறு முன்னேற்றலாம் என்பது பற்றிச் சிந்திக்க வேண்டும். அதைவிடுத்து, இனவாதத்தைத் தூண்டிச் சண்டை பிடிப்பதிலும் மதச் சண்டைகளைத் தூண்டிவிடுவதிலும் காலத்தைக் கடத்தக் கூடாது.

“பொருளாதார ரீதியில் இலங்கையை உயர்த்துவதே எமது இலக்கு. அதற்காக இளைஞர்கள் பாடுபடவேண்டும். அவர்களுக்கு உதவுவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். நாளை சமர்ப்பிக்கவுள்ள வரவு – செலவுத் திட்டம், நாட்டு மக்கள் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்குமென என்னால் உறுதிபடக் கூறமுடியும். குறிப்பாக, இளைஞர்களுக்கு இனிப்பாக இருக்கும்” என்று தெரிவித்தார்.

Related Posts