புதிய மின் கட்டணப் பட்டியல்!

ceylon_electricity_boardஏப்ரல் 20 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் அறிவிக்கப்பட்ட புதிய மின்சாரக் கட்டணமானது ஜனாதிபதியினால் மே தினத்தில் அறிவிக்கப்பட்ட நிவாரணத்துடன் புதிய மின் கட்டணப் பட்டியல் வெளியாகும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இதன்படி 180 அலகுகள் வரையிலான பாவனையாளர்களுக்கு 25 சதவீத மின் கட்டண நிவாரணம் வழங்கப்படவிருப்பதாக இது குறித்து இலங்கை மின்சார சபை விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

2013 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி அதிகரிக்கப்பட்ட மின்சாரக் கட்டணத்தை மே மாதம் முதலாம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நிவாரணங்களுக்கு உட்படுத்துவதாக தெரிவித்திருந்தார். இதன் அடிப்படையில் பல ஊடகங்கள் நிவாரணங்கள் ஏதும் வழங்கப்படவில்லை என தவறான முறையில் செய்திகளை வெளியிட்டிருந்தன என்றும் அந்த அறிக்கையில் கூட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதன்படி 0 தொடக்கம் 30 வரையிலான மின்னலகுகளுக்கு ஏற்கனவே காணப்பட்ட ஒரு அலகின் விலை 3 ரூபாவாகும். உத்தேச மின் கட்டண அதிகரிப்பு ஒரு அலகுக்கு 5 ரூபாவாகும். அதேபோன்று 31 அலகு தொடக்கம் 60 வரையிலான மின்னலகுக்கு பழைய விலையாக ஒரு அலகு 4 ரூபா 70 சதமாகும். இதன் புதிய விலை 6 ரூபாவாகும். ஆனால், பழைய விலைகளில் எவ்விதமான மாற்றத்தையும் மேற்கொள்ளாது 30 மின் அலகுகளுக்கு குறைவாக பாவனையாளர்களுக்கு ஒரு மின்னலகு 3 ரூபாவிற்கும் 31 தொடக்கம் 60 வரையிலான பாவனையாளர்களுக்கு ஒரு மின்னலகு 4ரூபா 70 சதத்திற்கும் வழங்க மின்சார சபை தீர்மானித்துள்ளது.

இந்நிலையில், 1 தொடக்கம் 30 வரையிலான மின் அலகுகளை பாவிப்போருக்கு மாதக் கட்டணமாக 142 ரூபா 50 சதமாகுவதுடன் 31 தொடக்கம் 60 வரையிலான மின்னலகுகளை பாவிப்போருக்கு மாதக்கட்டணமாக 426ரூபா 60 சதமாகக் காணப்படும். பூச்சியத்திலிருந்து 180 வரையிலான மின்னலகுகளை பாவிப்போருக்கு மின் கட்டணத்தில் அறவிடப்படும் எரிபொருள் சீராக்கல் கட்டணத்தில் 25 சதவீதம் நிவாரணம் வழங்கப்படும் என மின்சார சபை தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது

Related Posts