புதிய மாணவர்களை நிர்வாணமாக்கி கொடூர பகிடிவதை!

பேராதனை பல்கலைக்கழகத்தில் விவசாயபீட புதிய மாணவர்களை பகிடிவதைக்குட்படுத்திய சிரேஷ்ட மாணவர்கள் 15 பேர் நேற்றுக்காலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

நேற்றைய தினம் கண்டி மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்செய்த போது மார்ச் (02) வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இம்மாணவர்கள் நேற்று(20) அதிகாலை 01.00 மணியளவில் கைது செய்யப்பட்டதாக பேராதனை பொலிஸார் தெரிவித்தனர்.

பேராதனை – கலஹா வீதியில் உள்ள வீடொன்றில் வைத்து விவசாய பீடத்தின் முதலாம் ஆண்டு மாணவர்கள் 8 பேரை இரண்டாம் ஆண்டு மாணவர்கள் சிலர் பகிடிவதைக்கு உட்படுத்தியுள்ளனர். இது தொடர்பில் பல்கலைக்கழக ஒழுக்காற்று மேற்பார்வையாளர்களுக்குக் கிடைத்த தகவல்களையடுத்தே பொலிஸ் குழுவொன்று சம்பவம் இடம்பெற்ற வீட்டை சுற்றிவளைத்து மாணவர்களை கைதுசெய்துள்ளது.

பகிடிவதைக்கு உட்படுத்தப்பட்ட மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு அறிக்கைகள் பெறப்பட்டுள்ளன.

புதிய மாணவர்களை மிக மோசமான விதத்தில் பகடிவதைக்கு உட்படுத்தியுள்ளதாக பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

சிரேஷ்ட மாணவர்கள் புதிய மாணவர்களை நிர்வாணமாக்கி அவர்களின் தலைமுடியைக் கத்தரித்தும் உணர்ச்சிகளைத்தூண்டும் வகையில் செயல்பட்டுள்ளதாகவும் பாதிக்கப்பட் மாணவர்களின் பெற்றோர் தமது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளனர்.

பாதிக்கப்பட் மாணவர்களின் சார்பில் நிதிமன்றத்தில் ஆஜரான சட்டத்தரணி இச்சம்பவத்தை சாதாரண பகடிவதையாக மட்டும் பார்க்காமல் மிக மோசமான செயற்பாடாகக்கருதி உரிய தண்டனை வழங்க வேணடுமென நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

மேலதிக விசாரணைகளை பேராதனை பொலிஸ்பொறுப்பதிகாரி கமல் ஆரியவன்ச தலைமையிலான குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்

Related Posts