புதிய மனிதர்களை உருவாக்க ஊடகவியலாளர்கள் தேவை

‘புதிய மனிதர்களை உருவாக்கும் முயற்சியில் ஊடகவியலாளர்களின் தேவை இன்று உணரப்பட்டுள்ளது. கொலைகள், தற்கொலைகள், குற்றச்செயல்கள் சார்ந்த செய்திகளுக்கு முன்னுரிமை கொடுப்பதை விடுத்து, காலாசார விழுமியங்கள், பண்பாட்டு அடையாளங்கள், கலைச் செயற்பாடுகள் போன்ற விடயங்களுக்கு ஊடகவியலாளர்கள் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்’ என அரசாங்க தகவல் திணைக்களப் பணிப்பாளர் பேராசிரியர் ஆரியரத்ன அத்துகல தெரிவித்தார்.

areya-rathna-aththukola

அரசாங்க தகவல் திணைக்களத்தின் ஏற்பாட்டில் அபிவிருத்தியில் ஊடகவியலாளர்களின் பங்களிப்பு என்னும் தொனிப்பொருளில் யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்களுக்கான கருத்தரங்கில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

மேற்படி நடவடிக்கையினாலேயே நல்ல சமுதாயத்தினை உருவாக்க முடியும். இவ்வாறான பணிகளை சமூக அக்கறை சார்ந்த உடகவியலாளர்கள் ஆற்ற வேண்டும். கடந்த காலங்களில் சிங்கள, தமிழ் கலாசாரம் பரிமாறப்பட்டதாக இருந்தது. பேராசிரியர் சரத் சந்திராவின் மனமே, சிங்கபாகு ஆகிய இரண்டு நாடகங்கள் யாழ்ப்பாணத்தில் ஆற்றுகை செய்யப்பட்டன.

இதனூடாக கலாசார பரிமாற்றங்கள் தமிழ் – சிங்கள மக்களுக்கிடையே இடம்பெற்றன. இவ்வாறான கலாசார பரிவர்த்தணைச் செயற்பாடுகள் மீண்டும் அதிகளவில் இடம்பெறவேண்டும். செய்திகளுக்கு அப்பால் சென்று மக்களை ஆறுதல்படுத்தக்கூடிய கலை அம்சங்களை எழுதக்கூடிய வகையில் ஊடகவியலாளர்களின் தேவை இன்று உணரப்படுகின்றது.

இவ்வாறான ஊடகவியலாளர்கள் சமூகத்தில் மதிக்கப்படக்கூடியவர்களாக விளங்குவார்கள். சமுதாய ஊடகமாக ஊடகங்கள் மாற்றமடைய வேண்டும். நல்ல விடயங்களினை மக்களுக்கு வழங்க வேண்டிய பொறுப்பு ஊடகங்களுக்கு உண்டு. செய்திகளை கலை, இலக்கிய கட்டுரைகளாக முன்வைக்கலாம்.

அபிவிருத்தியில் மக்களுக்களுடனான தொடர்பை வலுப்படுத்த வேண்டும். 21ஆம் நூற்றாண்டில் புதிய மனிதர் தொடர்பாடலின் கனவை நனவாக்கும் செயற்பாடுகள் ஊடகங்களுக்கு உண்டு. கடந்த காலத்தில் நிலவிய தவறான கருத்துக்கள், செயற்பாடுகளைக் களைந்து புதிய மனிதர்களாகப் பயணிப்போம்.

நாங்கள் எந்த மொழியைப் பேசுபவராக இருந்தாலும் அல்லது வேறுபட்ட கலாசாரத்தை பின்பற்றுபவர்களாக இருந்தாலும் பொதுவான விடயங்களைப் பேசும்நிலை ஊடகவியலாளர்களிடையே இருக்க வேண்டும்.

சமுதாயத்திற்கு தேவையான பொதுவான மனிதனைத் தயார்ப்படுத்த வேண்டிய தேவையுள்ளது. ஊடகம் தொடர்பான அறிவும், புரிதலும் அதிகரிக்க வேண்டிய தேவையுள்ளது. ஊடகமானது நல்லது, கெட்டது இரண்டையும் வழங்கும் அம்சமாகவுள்ளது.

யாழ்ப்பாணத்து ஊடகத்தின் தாக்கத்தில் இந்திய ஊடகங்கள் பெரும் செல்வாக்கு வகிக்கின்றன. சினிமா ஊடகத்தின் தாக்கம், தற்கொலை போன்ற சமூகப் புறழ்வான நடத்தைகளுக்கு மக்களை இட்டுச்செல்கின்றன.

யாழ்ப்பாணக் கலாசாரம், பாரம்பரியம் இறுக்கம் நிறைந்தது. இவ்வாறான கலாச்சாரப் பண்பாட்டினை சீரழிக்கும் வகையிலான செயற்பாடுகள் உள்நுழைவதை தடைசெய்ய வேண்டும். இதற்காக ஊடகங்கள் காத்திரமான பங்களிப்பை வழங்க வேண்டும்’ என அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts