புதிய தொலைக்காட்சி கல்வி அலைவரிசை இன்று முதல் ஆரம்பம்!!

இலங்கை அனைத்து பாடசாலை மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை மேம்படுத்தும் நோக்கில் ‘குருகெதர’ புதிய தொலைக்காட்சி அலைவரிசை இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆகியோரின் வழிகாட்டலின் கீழ் கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் டலஸ் அழகப்பெருமவின் கருத்திட்டத்திற்கு அமைவாக உயர் கல்வி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தனவின் பங்கேற்புடன் இலங்கை ரூபவாஹினி கூட்டுதாபனத்தின் ஊடக பங்களிப்புடன் இன்று(20.04.2020) முதல் கற்றல் நடவடிக்கைகளில் மாணவர்களுக்கு இணைந்துக் கொள்ள முடியும்.

இதன்படி காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரைக்கும், இரவு 10 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை கற்றல் நடவடிக்கைகளில் கலந்து கொள்ள முடியும். நாளை (21.04.2020) முதல் பிற்பகல் 4 மணி முதல் கற்பித்தல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும்.

இதன் பிரகாரம் உயர்தர கலை பிரிவிற்காக தமிழ், சிங்களம், அரசியல் விஞ்ஞானம், புவியியல் ஆகிய விடயதானங்களும் வணிக பிரிவிற்காக பொருளாதார விஞ்ஞானம், வணிக கல்வி, கணக்கியல் ஆகிய பாடங்களும் கணித மற்றும் விஞ்ஞான பிரிவுகளுக்கான பாடங்களும் கற்பிக்கப்படும்.

அத்துடன் சாதாரண தர மாணவர்களுக்காக கணிதம், விஞ்ஞானம், தமிழ், சிங்களம் மற்றும் வரலாறு ஆகிய பாடங்கள் கற்பிக்கப்படும்.அனைத்து பாடங்களும் தமிழ் மற்றும் சிங்கள மொழிமூலமாக கற்பித்தல் நடவடிக்கை முன்னெடுக்கப்படும். மேலும் இலங்கை பரிட்சை திணைக்களத்தின் நிபுணத்துவத்துவம் வாய்ந்தவர்களின் கலந்துரையாடல்களும் இடம்பெறும்.

Related Posts