புதிதாக வரக்கூடிய ஜனாதிபதி யாராக இருந்தாலும் தமிழ் மக்களுடைய பிரச்சினைகளை முழுமையாக தீர்ந்து, தமிழ் மக்கள் கௌரவமாக வாழக் கூடிய சூழல் உருவாக வேண்டும். அந்த நிலைமை உருவாக நாங்கள் தொடர்ந்தும் உழைக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், த.தே.கூட்டமைப்பின் பேச்சாளருமான சுரேஷ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளர்.
கிளிநொச்சி மாவட்டத்தில் போரினால் பாதிக்கப்பட்டு தாய் தந்தையரை இழந்த மாணவர்களுக்கும், வறிய குடும்பத்தைச் சேர்ந்தோருக்குமாக 24 துவிச்சக்கர வண்டிகளை நாடாமன்ற உறுப்பினர் சுரேஷ் பிறேமச்சந்திரன் வழங்கி வைத்தார்.
இந்த நிகழ்விலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவித்தவை வருமாறு:-
வடக்கு மாகாணத்தில் மாத்திரம் 40 ஆயிரம்தொடக்கம் 50 ஆயிரம் கணவனை இழந்த பெண்கள் இருக்கின்றனர் என்று புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இவர்களில்யுத்தம் காரணமாகவே அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆகவே எங்களுக்கு ஒரு கடமை இருக்கின்றது. இந்த மக்கள் இம்மண்ணில் சீரோடும் சிறப்போடும் வாழ வேண்டும். எமது கலாசாரம், பண்பாடு ஆகியனவற்றை பாதுகாக்கும் வகையில் வாழ வேண்டும். அவர்களுக்கான வாழ்வாதாரங்களுக்குரிய உதவிகளை நாம் செய்து கொடுக்க வேண்டும். அவர்களும் எமது சமுதாயத்தில் தலைநிமிர்ந்து வாழ வேண்டும் என்ற அடிப்படையில் உதவிகளை செய்து வருகின்றோம்.
இந்த உதவிகள் இன்று உங்களுக்கு வந்து சேர்ந்ததற்கான காரணம் எங்களுடைய பிள்ளைகள் நன்றாக படிக்க வேண்டும் என்பதற்காகத்தான். பெற்றோரை இழந்த பாடசாலைகளில் கல்விகற்கும் மாணவர்களுக்கு, வறுமை கோட்டின் கீழ் வாழும் மிக நீண்ட தூரம் பாடசாலைக்கு பிரயாணிக்கும் மாணவர்களுக்காக இந்த சைக்கிள்களை வழங்குகின்றோம். நாங்கள் மிக விரைவில் தேர்தல் ஒன்றை சந்திக்க இருக்கின்றோம்.
மூன்றாவது முறை ஜனாதிபதியாக வருவதற்காக சட்டத்தை மாற்றி தேர்தலில் போட்டியிடுவதற்கான சந்தர்ப்பத்தை மஹிந்தஏற்படுத்தியுள்ளார். எங்களுடைய தேவை என்னவென்றால் வன்முறையற்ற தேர்தலாக அது அமைய வேண்டும். மக்கள் மிரட்டப்படக கூடாது. மக்களிடம் வாக்குச் சீட்டுக்கள், அடையாள அட்டைகள் பறிக்கப்படக் கூடாது. இந்த வகையில் மக்களின் வாக்களிக்கும் சுதந்திரம் பறிக்கப்படக் கூடாது. இந்த தேர்தல் காலத்தில் இவ்வாறான செயல்கள் நடக்கலாம் என்ற பயமும் மக்கள் மத்தியில் இருக்கத்தான் செய்கின்றது. ஆனால் மிகவும் வேதனையான விடயம் என்னவென்றால் ஆட்சிகள் மாறுகின்றன. ஜனாதிபதிகள் மாறுகின்றார்கள் எங்களுடைய பிரச்சினை மாறுகின்றதா? அது இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
நாங்கள் ஒரு கூட்டத்திற்கு சென்றாலும் அறிவிக்க வேண்டும். அவர்கள் வந்து படம் எடுக்க வேண்டும் ஆகவே நாங்கள் இவ்வாறான சூழ்நிலையில் இருக்கின்றோம் என்பது வருதப்படக்கூடிய விடயம். – என்றார்.