புதிய கொரோனா மாறுபாடு நாட்டிற்குள் வருவதை தடுக்க முடியாது – இலங்கை மருத்துவ சங்கம்

புதிதாக கண்டறியப்பட்ட Omicron எனப்படும் புதிய கொரோனா மாறுபாடு நாட்டிற்குள் வருவதை தடுக்க முடியாது என இலங்கை மருத்துவ சங்கம் (SLMA) தெரிவித்துள்ளது.

புதிய மாறுபாடு நாட்டிற்குள் நுழையாமல் இருப்பதை உறுதி செய்ய அதிகாரிகள் ஏற்கனவே நடவடிக்கை எடுத்தது போல் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என அந்தச் சங்கத்தின் தலைவர், கலாநிதி பத்மா குணரத்ன தெரிவித்தார்.

புதிய மாறுபாட்டின் நுழைவு தாமதமாகலாம் என்றாலும், அது ஒருபோதும் நாட்டிற்குள் நுழையாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்றும் அவர் எடுத்துரைத்தார்.

எவ்வாறாயினும், சுகாதார விதிகளை கண்டிப்பாக கடைப்பிடிப்பதன் முக்கியத்துவத்தையும் சரியான நேரத்தில் தடுப்பூசி போடுவதன் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார்.

இதேவேளை, புதிய மாறுபாடு நாட்டிற்குள் நுழையக்கூடிய பல ஓட்டைகள் இருப்பதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்தார்.

விமான நிலையத்தில் உள்ள அமைப்பு மிகவும் பலவீனமாக உள்ளதுதென்றும் எனவே, அதிகாரிகள் இதில் சிறப்பு கவனம் செலுத்தி, அனைத்து வழிகளிலும் கொரோனா பரவல் தடுக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts