Ad Widget

புதிய கேலிஃபேட் உருவாகியதாக ஐஸிஸ் அறிவிப்பு

ஈராக்கிலும், சிரியாவிலும், தனது கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசங்களை இணைத்து, புதிய இஸ்லாமிய மதரீதியான அரசு ( கேலிஃபேட்) ஒன்றை உருவாக்கியிருப்பதாக , இஸ்லாமியத் தீவிரவாதக் குழுவான ஐஸிஸ் அறிவித்திருக்கிறது.

iraq_syria

இந்த புதிய அரசின் கேலிஃப் ஆகவும், உலகின் அனைத்து முஸ்லீம்களின் தலைவராகவும், தனது தலைவர் அபு பக்கர் அல் பாக்தாதி இருப்பார் என்று அது அறிவித்திருக்கிறது.

அவர் இனி கலிஃப் இப்ராஹிம் என்ற பெயரில் அறியப்படுவார் என்று அது கூறியது.

இந்த கேலிஃபேட், வட சிரியாவின் அலெப்போவிலிருந்து கிழக்கு ஈராக்கில் உள்ள தியாலா மாகாணம் வரை பரவியிருக்கும் என்றும் அது அறிவித்திருக்கிறது.

இணையத்தில் பிரசுரிக்கப்பட்ட ஒலிவடிவப் பிரகடனம் ஒன்றில், இந்தக் குழு, எல்லா முஸ்லீம்களும் இந்தப் புதிய கேலிஃப்புக்கு தங்கள் விசுவாசத்தைத் தெரிவிக்கவேண்டும் என்றும், மேற்குலக நாடுகள் சொல்லும் “ஜனநாயகம் மற்றும் பிற குப்பைகளை” நிராகரிக்கவேண்டும் என்றும் அது கூறியிருக்கிறது.

இந்த புதிய நாடு, இனி சாதாரணமாக, “இஸ்லாமிய அரசு” என்று மட்டுமே அறியப்படும் என்று அது கூறியிருக்கிறது.

கடுமையான இஸ்லாமியச் சட்டங்களின் அடிப்படையில் அமைந்த ஒரு கேலிஃபேட்டை உருவாக்குவது என்பது பல ஜிஹாதிக் குழுக்களுக்கு ஒரு லட்சியமாகவே இருந்து வந்திருக்கிறது.

இந்த புதிய கேலிஃபேட் உருவாவது குறித்த அறிவிப்பு, அல் கயீதா இயக்கத்துக்கும், வளைகுடாப் பகுதியில் உள்ள பழமைவாத அரபு ஆட்சியாளர்களுக்கும், ஒரு நேரடியான சவாலாகவே பார்க்கப்படுவதாக பகுப்பாய்வாளர்கள் கூறுகின்றனர்.

இதனிடையே, இராக்கின் ராணுவம், ஐஸிஸ் கிளர்ச்சியாளர்களால் பிடிக்கப்பட்ட வடபுல நகரான திக்ரித்தை மீட்க தொடர்ந்து தனது தாக்குதலை நடத்தி வருகிறது.

இந்த நகரம் ஜூன் 11ம் தேதி கிளர்ச்சியாளர்களால் கைப்பற்றப்பட்டது.
குர்து மக்களுக்கு தனி நாட்டை உருவாக்குக- இஸ்ரேல் இதனிடையே, ஈராக்கில் சுன்னி கிளர்ச்சியாளர்கள் பெற்ற வெற்றிக்கு பதில் நடவடிக்கையாக, ஒரு சுயாட்சி பெற்ற குர்து நாட்டை உருவாக்குமாறு, இஸ்ரேலியப் பிரதமர் பின்யமின் நெடன்யாகு கோரியிருக்கிறார்.

இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவில் ஆற்றிய ஒரு உரையில், குர்து இன மக்கள், தாங்கள் ஒரு போராளி இன மக்கள், தங்களுக்கு அரசியல் பிடிப்பு இருக்கிறது, தாங்கள் சுதந்திரம் பெறத் தகுதியானவர்கள் என்பதை நிருபித்திருக்கிறார்கள் என்று அவர் கூறினார்.

குர்து இன மக்கள் தங்களுக்கு சுதந்திரம் வேண்டுமென்று பல தசாப்தங்களாகப் போரிட்டு வந்திருக்கிறார்கள். ஆனால் அவர்கள் சிரியா, துருக்கி, இரான் மற்றும் இராக் ஆகிய நாடுகளில் பிரிந்து வசிப்பதால், அவர்களது லட்சியம் எட்டப்படாமலே இருந்து வருகிறது.

துருக்கி மற்றும் அமெரிக்கா உட்பட சர்வதேச சமூகம் இராக் பிளவுபடுவதற்கு எதிர்ப்பாகவே இருந்து வருகிறது.

Related Posts