பிரித்தானியரிடமிருந்து இலங்கைக்கு சுதந்திரம் வழங்கப்பட்டபின் உருவாக்கப்பட்ட மூன்று அரசியல் யாப்புக்களை தமிழ்த் தரப்புக்கள் நிராகரித்திருந்த நிலையில் அதிலும் மோசமான அரசியல் யாப்பினை தமிழ்த் தரப்புக்கள் ஏற்றுக்கொள்ள முன்வந்திருப்பது இந்தத் தீவிலே தமிழர்களை வாழ்வுரிமை அற்றவர்களாகவே ஆக்கும் எனக் எச்சரித்திருக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் எமது தேசியத் தலைவரால் விடுதலைப் போராட்டம் எவ்வாறு உன்னத போராட்டமாக கட்டியெழுப்பப்பட்டதோ அதன் வழியில் எமது அரசியல் போராட்டத்தையும் உன்னதமான நேர்மையான அரசியல் கலாச்சாரமாக கட்டியெழுப்புவோம் என தெரிவித்துள்ளார்.
அரியாலை கலைமகள் சனசமூக நிலையத்தில் அப்பகுதி மக்களை சனிக்கிழமை சந்தித்த தமிழ்த் தேசியப் பேரவையினர் உள்ளூராட்சித் தேர்தல் மற்றும் அரசியல் யாப்பின் இடைக்கால அறிக்கை குறித்த கலந்துரையாடல்களை அம்மக்களுடன் மேற்கொண்டனர். அதன்போது உரையாற்றிய தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் குறிப்பிடுகையில்,
“நாங்கள் ஒரு பக்கத்திலே தேசிய விடுதலை மறுபக்கத்திலே சாதி, மத வேறுபாடற்ற சமத்துவமான ஊழலற்ற நிர்வாகத்தை நாங்கள் கட்டியெழுப்பி இந்த தேசத்தை ஒரு உன்னதமான தேசமாக நாங்கள் மாற்றுவோம். அபிவிருத்தி அடைந்துவருகின்ற மூன்றாபம் உலக நாடுகளிலே அரசியல் என்பது ஒரு சாக்கடை அரசியலாக இருக்கின்றது.
நாங்கள் ஒரு வித்தியாசமான புனிதமான, ஒரு நேர்மையான அரசியலைக் கட்டியெழுப்ப விரும்புகின்றோம். எமது ஆயுதப் போாரட்டம் உலக ஆயுதப் போராட்டங்களில் எவ்வாறு உன்னதமான ஆயுதப் போராட்டமாக எமது தேசியத் தலைவரால் கட்டியெழுப்பப்பட்டதோ அதேபோல அரசியலியே ஒரு உன்னதமான அரசியல் போராட்டத்தை நடத்திக்காட்டுவோம்.
இந்தத் தேர்தலுக்குப் பிற்பாடு இந்த இடைக்கால அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு புதிய அரசியல் யாப்பு பாராளுமன்றில் கொண்டுவந்து நிறைவேற்றப்படவுள்ளது. அதாவது மூன்றாவது குடியரசு யாப்பாகக் கொண்டுவரப்படவுள்ளது. அது ஒரு ஒற்றையாட்சி அரசியல் யாப்பாகக் கொண்டுவரப்படவுள்ளது. கடந்த கால யாப்புக்களுக்கும் இந்த யாப்புக்கும் என்ன வித்தியாசம் இருக்கப்போகின்றது என்றால் இலங்கை சுதந்திரமடைந்த பின் 69 வருடங்களில் மூன்று அரசியல் யாப்புக்கள் நடைமுறையில் இருந்துள்ளன. 1947 ஆம் ஆண்டு சோல்பரி அரசியல் யாப்பும் 1972 ஆம் ஆண்டு முதலாவது குடியரசு அரசியல் யாப்பும் 1978 ஆம் ஆண்டு இரண்டாவது குடியரசு அரசியல் யாப்பும் இருந்துள்ளன. ஆனால் இவ் அரசியல் யாப்புக்கள் எதனையும் தமிழர் தரப்புக்கள் ஆதரித்திருக்கவில்லை. எங்களுக்கு எதிரான அடக்குமுறையின் வெளிப்பாடுகளுக்கு அடிப்படையாக இருந்த இந்த அரசியல் யாப்புக்களை அன்றைய தமிழ்த் தலைவர்கள் நிராகரித்திருந்தனர்.
ஆனால் இன்று அதனிலும் மிக மோசமான தெளிவாக ஒற்றையாட்சிதான் என வரையறை செய்யப்பட்டு வெளிவரப்போகின்ற புதிய அரசியல் யாப்பினை நாங்களே தெரிவு செய்த தமிழ்த் தலமைகளும் சேர்ந்து ஆதரிக்கப்போகின்றன. இது தமிழ் மக்களுக்கு மிக மோசமான விளைவுகளைத் தரப்போகின்றது. தமிழர்களின் இருப்பையே இது கேள்விக்குறியாக்கப்போகின்றது.
1947 ஆம் ஆண்டு முன்வைக்கப்பட்ட அரசியல் யாப்பினை அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் எதிர்த்ததோடு அதனை முன்வைத்து 1948 ஆம் ஆண்டு போட்டியிட்ட தேர்தலிலே வெற்றிபெற்றது.
1972 ஆம் ஆண்டு முலாவது குடியரசு அரசியல் யாப்புக் கொண்டுவரப்பட்டபோது தந்தை செல்வா அதனை கடுமையாக எதிர்த்தார். தனது பதவியினை இராஜினாமாச் செய்த அவர் முடிந்தால் இடைத்தேர்தல் நடத்துங்கள் நான் தோற்றால் இந்த அரசியல் யாப்பை கொண்டுவாருங்கள் நான் வெற்றிபேற்றால் புதிய அரசியல் யாப்பு முயற்சியைக் கைவிடவேண்டும் என நிபந்தனை விதித்தார். ஆனால் அரசு அதனைக் கருத்தில் கொள்ளாது அரசியல் யாப்பினைக் கொண்டுவந்தது.
1972 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட இடைத்தேர்தலில் தந்தை செல்வா வெற்றியும் பெற்றார் இதன் மூலம் தமிழர் தரப்பு அந்த அரசியல் யாப்பினை நிராகரித்திருந்தது.
1978 ஆம் ஆண்டு அரசியல் யாப்பு உருவாக்க முன் நடந்த தேர்தலில் நீங்கள் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு தமிழீழத்துக்கு ஆணை வழங்கியிருந்தீர்கள். தன் மூலம் அந்த அரசியல் யாப்பையும் தமிழர் தரப்பு நிராகரித்திருந்தது.
இம்முறைதான் ஒரு ஒற்றையாட்சி அரசியல் யாப்பினை தமிழ்த்தலைவர்கள் முதல் முறையாக ஆதரித்திருக்கிறார்கள். இது அந்த உள்ளூராட்சித் தேர்தலின் பின் பொதுமக்களின் வாக்கெடுப்பிற்கு வரப்போகின்றது. இது வருகின்றபோது தமிழர்கள் இந்தத் தீவிலே வாழ்வுரிமை அற்றவர்களாக ஆக்கப்படுவார்கள்” – என்றார்.