புதிய அரசியல் யாப்பிற்கு சிறுபான்மையினரது பங்களிப்பு மிகவும் அவசியம்: சம்பந்தன்

பிரிக்கப்படாத ஐக்கிய இலங்கைக்குள் சகல இன மக்களும் நல்லிணக்கத்துடன் வாழ்வதற்கான அரசியல் சூழல் ஏற்படுத்தப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, நாட்டின் நலன் கருதியும் நாட்டு மக்களின் நலன் கருதியும் அனைத்து மக்களும் கௌரவத்துடனும் சுபீட்சத்துடனும் வாழக்கூடிய வகையில் அரசியல் சாசனம் அமைய வேண்டும் என்றும் அதற்கு மலையகத்தை சார்ந்த சிறுபான்மை அமைப்புகளும் வடக்கு கிழக்கு அமைப்புகளும் பூரண பங்களிப்பை வழங்க வேண்டுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

பண்டாரவளை இந்து இளைஞர் மன்றத்தின் 45ஆவது வருட பூர்த்தி விழா நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பண்டாரவளை ஆர்.சி.பெரியார் அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

கடந்த 1988ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட 13ஆவது திருத்தச் சட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்தி சகல மக்களும் பயனடையும் வகையில் புதிய அரசியல் சாசனத்தை ஏற்படுத்துவதற்கான முன்னெடுப்புகள் இடம்பெறுவதாக குறிப்பிட்ட எதிர்க்கட்சித் தலைவர், இதற்கென ஜனாதிபதியும் பிரதமரும் முன்னின்று செயற்படுவதாக மேலும் தெரிவித்தார்.

எனினும், ஜனாதிபதி மற்றும் பிரதமர் தத்தமது கட்சியினரை முறையாக வழிநடத்துவார்களேயானால் நிலையான நல்லாட்சியும் சமத்துவமும் ஏற்படுமென அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts