“இலங்கையின் தற்போதைய அரசியல் சாசனம் நீக்கப்படவேண்டும். புதிய அரசியல் சாசனம் நிறைவேற்றப்பட வேண்டும். அந்தப் புதிய அரசியல் சாசனத்தின் மூலம் தேசியப் பிரச்சினைக்கு முழுமையான தீர்வு கிட்டவேண்டும்.” – இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
திருகோணமலையில் நேற்று நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
“நாங்கள் தற்போது ஒரு வரட்டுத்தனமான போக்கைக் கடைப்பிடிக்க முடியாது. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு எமது பிரச்சினை சர்வதேச மயமாக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவை எமது பிரச்சினை தொடர்பாக 2012, 2013, 2014களில் மூன்று தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளது.
இதில் 2014ஆம் ஆண்டு தீர்மானத்தின் அடிப்படையில் இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமைகள் தொடர்பில் சர்வதேச விசாரணை இடம்பெற்றுள்ளது.
அது தொடர்பான அறிக்கை செப்ரெம்பர் மாதம் வெளிவரவுள்ளது. அந்த அறிக்கையின் ஊடாக இலங்கையின் அரசியல் சூழலில் பல்வேறு அழுத்தங்கள் ஏற்படும்.
நாட்டில் நிலவுகின்ற பொதுவான கருத்தான தற்போதைய அரசியல் சாசனம் நீக்கப்படவேண்டும். புதிய அரசியல் சாசனம் நிறைவேற்றப்பட வேண்டும். அந்தப் புதிய அரசியல் சாசனத்தின்மூலம் தேசியப் பிரச்சினைக்கு முழுமையான தீர்வு கிட்டவேண்டும்.
இவ்வாறான காரணங்களுக்காகவே இந்தத் தேர்தல் முக்கியத்துவம் பெறுகின்றது. எனவே, அனைத்துத் தமிழ் மக்களும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்து எமது பேரம்பேசும் சக்தியை நிலைநாட்டவேண்டும்” – என்றார்.