ஜனவரி 8ஆம் திகதி கொழும்பில் கூட்டமைப்பின் தலைவரான இரா.சம்பந்தன் எம்.பி. தலைமையில் நடைபெறும் புதிய அரசியலமைப்பு தொடர்பிலான விசேட கூட்டத்தில் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் கட்டாயம் பங்கேற்க வேண்டும் தலைவர் இரா.சம்பந்தன் பணிப்புரை விடுத்துள்ளார்.
புதிய அரசமைப்பு குறித்தும், உபகுழுக்களின் அறிக்கை மீதான மூன்று நாட்கள் விவாதம் பற்றியும் இதன்போது விசேடமாகவும் – விரிவாகவும் ஆராயப்படவுள்ளன.
2017ஆம் ஆண்டுக்கான முதலாவது பாராளுமன்ற அமர்வு ஜனவரி 9ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. அன்றைய தினம் அரசியலமைப்பு தயாரிப்பு பணிக்காக அரசியலமைப்புச் சபையின் வழிநடத்தும் குழுவினால் நியமிக்கப்பட்ட உப குழுக்களின் 7 அறிக்கைகள் மீதான விவாதம் ஆரம்பமாகி அது 11ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது.
பாராளுமன்ற அமர்வு கூடுவதற்கு முன்னர் அரசியலமைப்புச் சபையின் வழிநடத்தும் குழு 6, 7ஆம் திகதிகளில்கூடி அரசியலமைப்பு தயாரிப்பு பணிகள் சம்பந்தமாக பேச்சு நடத்தவுள்ளது. அதன் பின்னர் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் தலைவர்களுக்கான கூட்டமும் சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் நடைபெறவுள்ளது.
இவ்வாறானதொரு பின்புலத்திலேயே புதிய அரசியலமைப்பு, சமகால அரசியல் நிலைவரங்கள் சம்பந்தமாக பேசுவதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழு 8ஆம் திகதி கூடவுள்ளது.
அதேவேளை, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவான பொது எதிர் அணி, ஜே.வி.பி., தமிழ் முற்போற்க்கு கூட்டணி ஆகியனவும் ஜனவரி முதல் வாரத்தில் விசேட சந்திப்புகளில் ஈடுபடவுள்ளன.