புதிய அரசியலமைப்பு அமுல்படுத்தப்படும் வரை புலம்பெயர் தமிழர்கள் நாடு திரும்ப மாட்டார்கள்

புதிய அரசியலமைப்பு அமுல்படுத்தப்படும் வரை புலம்பெயர் தமிழர்கள் நாடு திரும்ப மாட்டார்கள் என எதிர்கட்சித் தலைவரான தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இளம் தொழில் முயற்சியாளர்கள் சபையின் ஏற்பாட்டில் கொழும்பில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட இரா.சம்பந்தன், அங்கு எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே இந்தத் தகவலைத் தெரிவித்திருக்கின்றார்.

விவசாயம், மீன்பிடி மற்றும் வாழ்வாதார துறைகள் அபிவிருத்தி செய்ய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய இரா.சம்பந்தன், இந்த செயற்பாடுகள் ஸ்ரீலங்காவை பிராந்தியத்தின் கேந்திர நிலையமாக மாற்றும் வகையில் அமைய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

ஸ்ரீலங்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையில் கைச்சாத்திடப்படவுள்ள சர்ச்சைக்குறிய எட்கா ஒப்பந்தம் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ள சம்பந்தன், இந்தியாவுடனான வர்த்தக வாய்ப்புக்களின் சாதகங்களை ஸ்ரீலங்காவின் தொழில் முயற்சியாளர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

இந்த விடயத்தில் உள்ளுர் வர்த்தக சமூகம் மற்றும் தொழில் முயற்சியாளர்கள் இந்தியாவின் சுரண்டல்களில் இருந்து பாதுகாக்கப்படுவார்கள் எனவும் எதிர்கட்சித் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவுடனான சுதந்திர வர்த்தக உடன்படிக்கை 2000 ஆம் ஆண்டு முதல் அமுலில் உள்ள போதிலும் இதுவரை ஸ்ரீலங்காவிற்கு அதனால் எந்தவொரு நன்மைகளும் கிட்டவில்லை என இளம் தொழில் முயற்சியாளர்கள் சபையின் சில உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்தியாவினால் அமுல்படுத்தப்படும் சுங்க வரிகள் காரணமாக அவர்களே சுதந்திர வர்த்தக உடன்படிக்கையால் நன்மை அடைந்துள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் குறித்து எதிர்ப்புக்களை வெளியிடாமை குறித்தும் இதன்போது எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனிடம் வினவப்பட்டுள்ளது,

இதற்கு பதில் அளித்த இரா.சம்பந்தன், இந்திய மீனவர்களின் அத்துமீறல் உள்ளுர் மீனவர்களை பாதிக்கும் விடயம் எனவும் இந்திய அரசாங்கத்திற்கு இது குறித்து எடுத்துக் கூறியுள்ளதாகவும் தெரிவித்தார். அதேவேளை புதிய அரசியலமைப்பு அமுல்படுத்தப்படும் வரை புலம்பெயர் தமிழர்கள் காத்திருப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts