சிறிலங்காவின் புதிய அமைச்சரவை 45 அமைச்சர்களைக் கொண்டதாக இருக்கும் என்று, ஐதேகவின் பிரதித் தலைவர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
தேசிய அரசாங்கத்தில், ஐதேகவுக்கும், சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கும் அமைச்சர் ஆசனங்களைப் பங்கீடு செய்வதில் குழப்பமான நிலை நீடித்து வருகிறது.
இருதரப்பும் இன்னமும் இணக்கப்பாடு ஒன்றுக்கு வராத நிலையில், ஏற்கனவே அமைச்சரவை பதவியேற்பு இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், நாளை அதிபர் செயலகத்தில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பர் என்று தெரிவித்துள்ளார் ரவி கருணாநாயக்க.
அமைச்சரவையில் இடம்பெறும் அமைச்சர்களின் எண்ணிக்கை 45 ஆக இருக்கும் என்றும், அமைச்சரவையில் இடம்பெறாத, பிரதி அமைச்சர்களின் தொகை 35 ஆக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, சிறிலங்கா சுதந்திரக் கட்சி முக்கியமான அமைச்சுப் பதவிகளை கோருவதாகவும், ஏற்கனவே ஒதுக்கப்பட்ட அமைச்சுப் பதவிகள் குறித்து சுதந்திரக் கட்சியின் மூத்த தலைவர்கள் அதிருப்தி அடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனால், அமைச்சர்கள் நியமனம் தொடர்பான இழுபறி நிலை இன்னமும் நீடித்து வருகிறது.
இந்த இழுபறி நிலைக்கு இன்று தீர்வு காணப்பட்டால் மாத்திரமே நாளை அமைச்சர்கள் பதவியேற்பு இடம்பெறும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேவேளை, சிறிலங்கா சுதந்திரக் கட்சி விரும்பாது போனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவுடன் தனித்து ஆட்சியமைக்கவும் ஐதேக தயாராக இருப்பதாக, அந்தக் கட்சியின் பொதுச்செயலர் கபீர் காசிம் தெரிவித்துள்ளார்.