புடின் பின்வாங்கினால் படுகொலை செய்யப்படுவார்: எலான் மஸ்க் எச்சரிக்கை!!

ரஷ்யா – உக்ரைன் போரில் விளாடிமிர் புடின் பின்வாங்கினால் அவர் படுகொலை செய்யப்படுவார் என டெஸ்லா நிறுவனத் தலைவர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் போர், இஸ்ரேல் – ஹமாஸ் மோதல், சீனா – தாய்வான் பதற்றம் ஆகிய முக்கிய விவகாரங்கள் குறித்து அமெரிக்க குடியரசுக் கட்சியின் செனட்டர்களிடம், எக்ஸ் ஸ்பேசஸ் தளம் மூலம் கருத்துகள் பகிர்ந்துகொள்ளப்பட்டது.

இந்த நிகழ்வில், விஸ்கான்சின் ரான் ஜான்சன், ஓஹியோவின் ஜேடி வான்ஸ், உட்டாவின் மைக் லீ, குடியரசுக் கட்சியின் விவேக் ராமசாமி, கிராஃப்ட் வென்ச்சர்ஸ், எல்.எல்.சி-யின் இணை நிறுவனர் டேவிட் சாக்ஸ் ஆகியோருடன் டெஸ்லா நிறுவனத் தலைவர் எலான் மஸ்க் கலந்துகொண்டார்.

குறித்த நிகழ்வில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே எலான் மஸ்க் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர்,

” உக்ரைன் வெற்றியை எதிர்பார்ப்பவர்கள் கற்பனை உலகில் வாழ்கிறார்கள். உக்ரைன், இஸ்ரேல், தைவானுக்கு 95 பில்லியன் டொலர் உதவி வழங்கப்பட்டிருக்கிறது.

இதில் உக்ரைனுக்கு மாத்திரம் 60 பில்லியன் டொலர் உதவி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த உதவி உக்ரைனுக்கு பலனளிக்காது.

போரை நீடிப்பதும் உக்ரைனுக்கு நல்லதல்ல. அதே நேரம் இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வர புடினுக்கு அழுத்தம் அதிகரித்துள்ளது.

இவ்வாறானதொரு சூழ்நிலையில் அவர் பின்வாங்கினால் படுகொலை செய்யப்படுவார். போரின் இரு தரப்பிலும் உள்ள மக்களின் இறப்பைத் தடுப்பதில்தான் நான் ஆர்வமாக இருக்கிறேன்.

ரஷ்ய ஜனாதிபதி புடினை ஆட்சியிலிருந்து இறக்க முயல்வதுதான் புத்திசாலித்தனம். ரஷ்யாவில் ஆட்சி மாற்றத்தை விரும்பினால், புடினை எதிர்த்து நிற்கக்கூடிய நபர் யார் என்பதையும் சிந்திக்க வேண்டும்.

அப்படித் தேர்ந்தெடுக்கப்படும் நபர் அமைதியானவராக இருக்க வேண்டும். ஆனால், தற்போதைய சூழலில் யாரும் அவ்வாறு இல்லை.

புடினுக்கு மாற்றாக ஒருவரைக் கொண்டு வந்தாலும், அவர் புடினைவிடக் கூடுதல் வேகம் கொண்டவராகத்தான் இருப்பார்” என்றார்.

Related Posts