புங்குடுதீவு மாணவியின் கொலை வழக்குடன் தொடர்புடையவர் என மக்களால் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட சுவிஸ் நாட்டு வதிவிடப் பிரஜை தொடர்பில், வடபகுதியிலுள்ள பொலிஸ் உயரதிகாரி ஒருவரிடம் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணை மேற்கொண்டுள்ளதாக பொலிஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொதுமக்களால் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட 9ஆவது சந்தேகநபரான மேற்படி சுவிஸ் வதிவிடப் பிரஜை, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் எவ்வாறு கொழும்புக்கு தப்பிச் சென்றார் என்பது தொடர்பில் விசாரணை செய்ய வேண்டும் என புங்குடுதீவு மாணவி தொடர்பில் ஆஜராகிய சட்டத்தரணி ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் கடந்த முதலாம் திகதி கோரிக்கை முன்வைத்தார்.
9ஆவது சந்தேகநபரை அதிகாரிகள் சிலர் தப்பிக்க வைக்க முனைந்தார்களா? என்பது தொடர்பில் சந்தேகமுள்ளதாகவும் மேற்படி சட்டத்திரணி, அதன்போது மன்றில் கேள்வி எழுப்பியிருந்தார்.
அவரது கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதவான் செல்வநாயகம் லெனின்குமார், 9ஆவது சந்தேகநபர் தொடர்பான குற்றப்பத்திரிகையிலுள்ள குழப்பநிலையை தீர்க்கும் முகமாக அது தொடர்பான முழுமையாக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு குற்றப்புலனாய்வுப் பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.
அதற்கமைய விசாரணைகளை மேற்கொண்ட குற்றப்புலனாய்வுப் பிரிவினர் இவ்விடயம் தொடர்பில் பொலிஸ் உயரதிகாரியொருவரையும் விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர்.