புங்குடுதீவு பகுதியில் கடற்படையினரின் கவசவாகனம் மோதி, பாடசாலை மாணவி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட கடற்படையின் வாகனச் சாரதி பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த வழக்கு நேற்று (புதன்கிழமை) ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் நீதவான் ஏ.எம்.எம்.றியாழ் முன்னிலையில் எடுத்து கொள்ளப்பட்டது.
இதன்போது, மாணவியை பாடசாலைக்கு மோட்டார் சைக்கிளில் ஏற்றி சென்ற மாணவியின் மாமனாரையும் பொலிஸார் கைது செய்து வழக்கில் சந்தேகநபராக இணைத்திருந்தனர்.
குற்றத்திற்கு உடந்தையானவர்களை குற்றத்துடன் தொடர்புடையவர்கள் என சந்தேகநபர்களாக வழக்கில் இணைக்கலாம். ஆனால் மாமனார் எந்த அடிப்படையில் வழக்கில் இனைக்கப்பட்டார் என நீதவான் வினவினார்.
அதற்கு, மாணவிக்கு தலைகவசம் அணியாது மோட்டார் சைக்கிளில் ஏற்றி சென்றமையால் வழக்கில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் பதிலுரைத்தனர்.
தலைக்கவசம் அணியாது அழைத்து சென்றமை தனி வழக்காக பதிவு செய்யப்பட வேண்டுமே தவிர, விபத்து வழக்கில் விபத்தினை ஏற்படுத்தி மரணத்தை விளைவித்த குற்றசாட்டில் சந்தேகநபர்களில் ஒருவராக அவரை இணைக்க முடியாது என நீதவான் கண்டிப்புடன் பொலிஸாருக்கு அறிவுறுத்தினார்.
குறித்த வழக்கில் சந்தேகநபர்களில் ஒருவராக மாணவியின் மாமனாரும் இணைக்கப்பட்டிருந்த நிலையில், மாமனார் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி அவருக்கு பிணை கோரி மன்றில் விண்ணப்பித்தார். அதனை தொடர்ந்து மாணவியின் மாமனாருக்கு ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான சரீர பிணையில் செல்ல நீதிவான் அனுமதித்தார்.
குறித்த வழக்கின் சந்தேகநபர்களாக கடற்படை சாரதியும், மாணவியின் மாமனாரும் இணைக்கப்பட்டு உள்ளமையால், ஒரு அப்பாவி தண்டிக்கப்பட கூடாது எனும் நோக்கம் மன்றுக்கு உள்ளமையால், அந்த வழக்கில் மாமனாருக்கு பிணை வழங்கப்படும்போது என்ன பிணை நிபந்தனைகள் உள்ளனவோ அதே பிணை நிபந்தனைகளுடன் சாரதியும் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.