புங்குடுதீவு மாணவி படுகொலை வழக்கில் பன்னிரண்டாவது சந்தேக நபரும் நீதிமன்றில்

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கில் பன்னிரண்டாவதகாவும் சந்தேகநபர் ஒருவர் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் நேற்றைய தினம் (01) முன்னிலைப்படுத்தப்பட்டார்.

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களின் வழக்கு விசாரணைகளுடன் இணைக்காது மேலும் ஒருவர் பதினோராவது சந்தேக நபராக கைது செய்யப்பட்டு பிரிதொரு தினத்தில் நீதிமன்றில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகின்றது.

அந்த வகையில் நேற்றைய தினம் பதினோராவது சந்தேகநபரின் வழக்கு விசாரணை ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் இ.சபேசன் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

அதன்போது பதினோராவது சந்தேக நபரான உதயசூரியன் சுரேஷ்கரணுடன் பன்னிரண்டாவது சந்தேக நபராக தர்மலிங்கம் ரவீந்திரனும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

அதனை தொடர்ந்து பதில் நீதவான் வழக்கு விசாரணையை எதிர்வரும் 12 ம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

நேற்றைய தினம் குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவினரும் நீதிமன்றில் முன்னிலை ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அதேவேளை பதினோராவது சந்தேக நபரின் தாயார் ´தன்னுடைய மகனை பொய் குற்றச்சாட்டு சுமத்தி கைது செய்து உள்ளதாகவும், அரசு தரப்பு சாட்சியாக மாறுமாறு குற்ற தடுப்பு புலனாய்வு பிரிவு பொலிசார் வற்புறுத்துகின்றார்கள் என கடந்த 23ம் திகதி யாழில் உள்ள மனித உரிமை ஆணைக்குழு அலுவலகத்தில் முறைப்பாடு பதிவு செய்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts