புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் முக்கிய சூத்திரதாரியான சுவிஸ்குமாரை விடுவித்து உதவியதாக பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிரான வழக்கின் விசாரணைகள் முற்றுப்பெற்று மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதற்காக அறிக்கை சட்ட மா அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளநிலையில் யாழ்ப்பாண ஊடகவியலாளர் ஒருவர் விசாரணைக்காக குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் அழைக்கப்பட்டுள்ளார்.
சுவிஸ் குமாரை தப்பிக்க உதவியதாக குற்றஞ்சாட்ப்பட்டுள்ள வடக்கு மாகாண முன்னாள் மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் ஏ ஜெயசிங்க மற்றும் உப பொலிஸ் பரிசோதகர் சிறிகஜன் ஆகிய பொலிஸ் அதிகாரிகளின் தொலைபெசி உரையாடல் தொடர்பான அறிக்கையின் பிரகாரம் யாழ்ப்பாணம் தனியார் தொலைக்காட்சியின் அலுவலகச் செய்தியாளர் நடராஜா குகராஜா என்ற ஊடகவியலாளரே இவ்வாறு விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
புங்குடுதீவு மாணவி வித்தியா சிவலோகநாதன் படுகொலை வழக்கின் முக்கிய சூத்திரதாரியாக கூறப்படும் சுவிஸ்குமார் என அழைக்கப்படும் மகாலிங்கம் சசிக்குமார் என்பவரை விடுவித்து உதவினார்கள் என்ற குற்றச்சாட்டில் வடக்கு மாகாண முன்னாள் மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் ஏ ஜெயசிங்க மற்றும் உப பொலிஸ் பரிசோதகர் சிறிகஜன் ஆகியோருக்கு எதிராக குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் ஊர்காவற்றுறை நீதிவான் மன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
இதில் மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் ஏ ஜெயசிங்க கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் இருந்து பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார். உப பொலிஸ் பரிசோதகர் சிறிகஜன் தலைமறைவாகி உள்ளார். அவருக்கு எதிராக நீதிமன்றால் பகிரங்கப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு ஊர்காவற்றுறை நீதிமன்றில் நீதிவான் ஏ.ஜூட்சன் முன்னிலையில் கடந்த ஜூன் 20ஆம் திகதி விசாரணைக்கு வந்தது.
இதன்போது, வழக்குத் தொடுனர் சார்பில் முன்னிலையான அரச சட்டவாதி, “இந்த வழக்கின் விசாரணைகள் முற்றுப்பெற்று வழக்கின் கோவை தற்போது சட்ட மா அதிபரின் ஆலோசனைக்கு கையளிக்கப்பட்டுள்ளது” என மன்றில் தெரிவித்தார்.
இதையடுத்து இந்த வழக்கு வரும் ஒக்டோபர் மாதம் 10ஆம் திகதிவரை ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றால் ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில் இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள வடக்கு மாகாண முன்னாள் மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் ஏ ஜெயசிங்க மற்றும் உப பொலிஸ் பரிசோதகர் சிறிகஜன் ஆகிய பொலிஸ் அதிகாரிகளின் தொலைபெசி உரையாடல் தொடர்பான அறிக்கையின் பிரகாரம் யாழ்ப்பாண ஊடகவியலாளர் நடராஜா குகராஜா என்பவரை விசாரணைக்கு வருமாறு கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அழைப்பு அனுப்பியுள்ளார்.
கொழும்பு 01இல் அமைந்துள்ள குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு வரும் 24ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு ஊடகவியலாளரை சமுகமளிக்குமாறு அந்த அழைப்பில் கோரப்பட்டுள்ளது.