புங்குடுதீவு மாணவி கொலை: சந்தேகநபர்களை காக்க கடும் பிரயத்தனம்!! பொலிஸாருக்கு நீதிபதிகள் கடும் எச்சரிக்கை!!

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு, நீதாய விளக்கம் முன்பான (ட்ரயல் அட் பார்) ஐந்தாம் நாள் சாட்சிப் பதிவுகள், நேற்றுச் செவ்வாய்க்கிழமை (04), யாழ். நீதிமன்றக் கட்டடத் தொகுதியின் இரண்டாம் மாடியில், மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தலைமையில், மேல் நீதிமன்ற நீதிபதிகளான அன்னலிங்கம் பிரேமசங்கர் மற்றும் மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

அதன்போது எதிராளிகளான பூபாலசிங்கம் இந்திரகுமார், பூபாலசிங்கம் ஜெயக்குமார், பூபாலசிங்கம் தவக்குமார், மகாலிங்கம் சசிதரன், தில்லைநாதன் சந்திரஹாசன், சிவதேவன் துஷாந்த், பழனி ரூபசிங்கம் குகநாதன், ஜெயதரன் கோகிலன் மற்றும் மகாலிங்கம் சசிக்குமார் ஆகிய ஒன்பது பேரும், மன்றில் முற்படுத்தப்பட்டிருந்தனர்.

அத்துடன், பிரதி சொலிசிட்டர் ஜெனரல் குமார் இரட்ணம் தலைமையில், அரச சட்டவாதிகளான நாகரத்தினம் நிஷாந்த், லக்சி டீ சில்வா மற்றும் மாலினி விக்னேஸ்வரன் ஆகியோர் முன்னிலையாகி இருந்தனர்.

அதேநேரம் 1ஆம், 2ஆம், 3ஆம், 5ஆம் மற்றும் 6ஆம் எதிராளிகள் சார்பில், சட்டத்தரணி மஹிந்த ஜயவர்த்தன, எம்.என்.நிஷாந்த மற்றும் சரங்க பாலசிங்க ஆகியோரும் 5ஆம் எதிராளியின் சார்பில், சட்டத்தரணி ஆறுமுகம் ரகுபதியும் 4ஆம், 7ஆம் மற்றும் 9ஆம் எதிராளிகள் சார்பில் சட்டத்தரணி சின்னராசா கேதீஸ்வரன் ஆகியோர் முன்னிலையாகி இருந்தனர். அத்துடன், 8ஆம் எதிராளி சார்பிலும் அனைத்து எதிராளிகள் சார்பிலும், மன்றினால் நியமிக்கப்பட்ட சட்டத்தரணி விக்னேஸ்வரன் ஜெயந்தாவும் முன்னிலையாகி இருந்தார்.

இந்நிலையில், வழக்கின் 14ஆவது சாட்சியமான கைத்தான்பிள்ளை ஜூட்ஸ் என்பவர் சாட்சியமளிக்கையில் ,
“நான் குருநகர் பகுதியைச் சேர்ந்தனான். யாழ். நகர் பகுதியில், மூக்குக் கண்ணாடி விற்பனை நிலையம் வைத்துள்ளேன். கண் பரிசோதனை தொடர்பில், 20 வருடத்துக்கும் மேலான அனுபவம் உண்டு. அத்துடன், அது தொடர்பில் மூன்று வருட கற்கைநெறியையும் பூர்த்தி செய்துள்ளேன்.

“என்னுடைய கடைக்கு வந்திருந்த குற்றத்தடுப்புப் பிரிவு அதிகாரிகள், ஒரு மூக்குக் கண்ணாடியைக் கொடுத்து, அது தொடர்பில் பரிசோதனை செய்யுமாறு கூறினர். அந்த கண்ணாடியைப் பரிசோதித்த போது, அதன் வலது கண்பக்க வில்லை சாதாரண வில்லையாகவும் இடது கண் வில்லை பார்வை குறைபாடு உடையவர்களுக்கான வில்லையாகவும் காணப்பட்டது” என்றார்.

“அந்தக் கண்ணாடியை அடையாளம் காட்ட முடியுமா” என, பிரதி சொலிசிட்டர் ஜெனரல் கேட்டார். அதற்கு, “ஆம்” என அவர் பதிலளித்தார். அப்போது, மன்றினால் சான்று பொருளான மூக்குக் கண்ணாடி, அவருக்குக் காட்டப்பட்டது. அவர் அந்தக் கண்ணாடியினைப் பரிசோதித்த பின்னர், “நான் அன்று பரிசோதித்த கண்ணாடியின் இடது கண் வில்லையில் கீறு பட்டு கோடுகள் காணப்பட்டிருந்தன. இந்தக் கண்ணாடியிலும் அப்படி கோடுகள் காணப்படுகின்றன” எனக் கூறி, அந்தக் கண்ணாடியினை அடையாளம் காட்டினார்.

“இந்த மூக்குக் கண்ணாடியினை, சாதாரணமானவர்கள் அணிவார்களா?” எனவும் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், “சாதாரணமானவர்கள் இதனை அணிய முடியாது. ஏனெனில், இதன் இடதுபக்க கண்வில்லை, பார்வைக் குறைபாடு உடையவர்களுக்காகவென விசேடமாகச் செய்யப்பட்டது. அதனால், சாதாரணமானவர்கள் அணிய முடியாது” என்றார். அதனைத் தொடர்ந்து, குறித்த சாட்சியம் முடிவுறுத்தப்பட்டு, சாட்சியாளர் விடுவிக்கப்பட்டார்.

அடுத்ததாக, வழக்கின் 19ஆவது சாட்சியமாக, சம்பவம் நடைபெற்ற காலப்பகுதியின்போது, ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியாக இருந்த குயிண்டஸ் குணால் பெரேரா சாட்சியம் அளிக்கையில் கூறியதாவது,

“நான் 2015ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் திகதியன்று, விடுமுறையை முடித்து மீண்டும் சேவையில் இணைந்து கொண்டேன். அன்றைய தினம் இரவு 8.40 மணியளவில், பாடசாலைக்குச் சென்ற மாணவியொருவர் இதுவரை வீடு திரும்பவில்லை என, மாணவியின் தாயான சிவலோகநாதன் சரஸ்வதி என்பவர், ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார்.

“அது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்கு, உப பொலிஸ் பரிசோதகர் அநோசியஸ் தலைமையிலான பொலிஸ் குழுவொன்று சென்றது. மறுநாள் 14ஆம் திகதி காலை, பொலிஸ் அவரசச் சேவை இலக்கமான 119க்கு, புங்குடுதீவு – ஆலடிச் சந்திக்கு அருகில், பெண் பிள்ளை ஒருவரின் சடலம் காணப்படுவதாக தகவல் கிடைத்தது. அந்தத் தகவல், எமது பொலிஸ் நிலையத்துக்கு அறிவிக்கப்பட்டது.

“அதனையடுத்து நான், உப பொலிஸ் பரிசோதகர் தலைமையிலான பொலிஸ் குழுவுடன், சம்பவ இடத்துக்கு, காலை 7.20 மணியளவில் புறப்பட்டோம். காலை 8 மணியளவில் சம்பவ இடத்தைச் சென்றடைந்தோம். எமது பொலிஸ் நிலையத்தில் இருந்து ஆலடிச் சந்திக்கு 22 கிலோமீற்றர் தூரம். ஆலடிச் சந்தியில் இருந்து சடலம் கிடந்த இடமானது, சுமார் 200 மீற்றர் தூரமாகும். அப்பகுதிக்கு ஒரு மணல் பாதை ஊடாக பற்றைகள், உடைந்த வீடுகள், பனைமரங்கள் உள்ள பகுதி ஊடாகச் சென்றோம். அந்தப் பாதையை வல்லவன் பாதை என்பார்கள்.

“நாங்கள் அங்கே சென்றபோது, எமது பொலிஸ் நிலையத்தின் கீழ் இயங்கும் குறிகட்டுவான் பொலிஸ் காவலரண் பொறுப்பதிகாரி, இறந்த மாணவியின் தாய், சகோதரன் உட்பட ஊரவர்கள் கூடிநின்றார்கள். சடலம் கிடக்கும் இடத்துக்குச் செல்வதற்கு முன்பாக, சுமார் 10 – 15 அடி தூரத்தில் மாணவியின் சப்பாத்து ஒன்றும் காணப்பட்டது.

அதனைத் தாண்டி, சடலம் கிடக்கும் இடத்துக்குச் சென்றோம். சடலத்தை மாணவியின் தாயார் அடையாளம் காட்டினார். அதன்போது, சடலம் வெள்ளை துணியினால் மூடப்பட்டு இருந்தது. சடலம் கிடந்த இடத்தில் இருந்து 8 மீற்றர் தூரத்திலேயே, மற்றைய சப்பாத்து கிடந்தது. சடலம் கண்டெடுப்பதற்கு முதல் நாள், அப்பகுதியில் மழை பெய்திருந்தமையால், சடலம் காணப்பட்ட பகுதி உட்பட அந்தப் பகுதிகளில் வெள்ளம் தேங்கிநின்றது.

“அதனையடுத்து, சம்பவம் தொடர்பில், சட்ட வைத்திய அதிகாரி, ஊர்காவற்றுறை நீதவான், தடயவியல் பிரிவு, திடீர் மரண விசாரணை அதிகாரி ஆகியோருக்கு அறிவித்தேன். அவர்கள் வந்த பின்னர், சடலத்தின் மேல் இருந்த வெள்ளைத் துணியை அகற்றிவிட்டு, சடலத்தைப் பார்வையிட்டேன். அதன்போது, கால்கள் இரண்டும் 180 பாகை விரிக்கப்பட்ட நிலையில், அருகில் இருந்த மரங்களில் கட்டப்பட்டு இருந்தன. முகம், உடல் என்பன வீங்கிக் காணப்பட்டன. கண், பெண் உறுப்பு, மார்புப் பகுதிகளில், ஒரு வகையான திரவம் காணப்பட்டது. அதனை எறும்புகள் மொய்த்துகொண்டு இருந்தன. குறித்த மாணவியின் தலைமுடி நீளமானது. அதனை இரு பகுதிகளாகப் பிரித்து, ஒரு பகுதியை மாத்திரம் தலைப் பட்டியை (ரப்பன்) கொண்டு கைகள் இரண்டையும் சேர்ந்து, பிடரிக்கு பின் பகுதியாக வைத்து கட்டப்பட்டு இருந்தன. மற்றைய பகுதி தலைமுடி, அருகில் இருந்த மரம் ஒன்றின் வேரில் கட்டப்பட்டு இருந்தது. சடலத்தின் அருகில், குடை, சைக்கிள், பாடசாலைப் புத்தகப் பை என்பனவும் காணப்பட்டன.

அதன் பின்னர், சடலத்தை பிரேத பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தோம்.
“அதன் பிறகு, தமிழ் மொழி பேசும் பொலிஸ் உத்தியோகஸ்தர் கோபி என்பவரை, இறந்த மாணவியின் தாயாரிடம் வாக்குமூலம் பெறுமாறு பணித்தேன். தாயின் வாக்குமூலத்தின் அடிப்படையில், 14ஆம் திகதி மாலை புங்குடுதீவை சேர்ந்த பூபாலசிங்கம் இந்திரகுமார், பூபாலசிங்கம் ஜெயக்குமார், பூபாலசிங்கம் தவக்குமார் ஆகிய மூவரையும் கைது செய்தேன். அவர்களது வீடுகளில் மேற்கொண்ட தேடுதல்களின் போது, ஜெயக்குமார் ஒன்றைக் கண்டெடுத்தோம். அதன் தோற்பட்டைப் பகுதியில், இரத்த கறையை ஒத்த கறையும் சேறும் காணப்பட்டது. அதனால், அதனை சான்றுப் பொருளாக மீட்டோம்.

“அதேபோன்று, தவக்குமார் என்பவரைக் கைது செய்யும் போது, அவரது வீட்டில் இருந்து சேர்ட் ஒன்றைக் கைப்பற்றினோம். அதிலும் கறைகள் காணப்பட்டன. கைது செய்யப்பட்டட மூன்று சந்தேகநபர்களையும், மறுநாள் 15ஆம் திகதி, ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தினோம்.

“மாணவியின் இறுதிக் கிரியைகள், 15ஆம் திகதி நடைபெற்றன. அதனால், அப்பகுதிப் பாடசாலைகள், கடைகள் எல்லாம் மூடப்பட்டு, மாணவர்கள், பொதுமக்கள், வீதிகளில் இறங்கி, இரு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். அதனால், அப்பகுதியில் அசாதாரண சூழ்நிலை நிலவியது.

“இந்தக் கொலையுடன் சம்பந்தப்பட்ட மேலும் ஐந்து சந்தேகநபர்கள் உள்ளனர் எனும் தகவல் எனக்குக் கிடைத்தது. அதன் அடிப்படையில், 17ஆம் திகதியன்று, மகாலிங்கம் சசிதரன், தில்லைநாதன் சந்திரஹாசன், சிவதேவன் துஷாந்த், பழனி ரூபசிங்கம் குகநாதன் மற்றும் ஜெயதரன் கோகிலன் ஆகிய ஐவரையும் கைது செய்தேன்.

“கைது செய்யப்பட்டவர்களை, குறிக்கட்டுவான் பொலிஸ் காவலரணில் வைத்து அவர்களின் வாக்குமூலங்களைப் பதிவு செய்துகொண்டிருந்த வேளை, ஊரவர்கள் ஒன்றுகூடி, தடிகள் பொல்லுகளுடன் காவலரணை சுற்றிவளைத்து சந்தேகநபர்களை தங்களிடம் ஒப்படைக்குமாறும் அவர்களை தாங்கள் கொலை செய்யவேண்டும் எனவும் கோரினார்கள். அதனால் நாம், காரைநகர் கடற்படையின் கட்டளையிடும் அதிகாரியுடன் தொடர்புகொண்டு, அதிவிரைவுப் படகு ஒன்றின் மூலம், சந்தேகநபர்களை ஏற்றிக்கொண்டு, ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச்செல்ல முயன்ற வேளை, ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தை முற்றுகையிடுவதற்காக மக்கள் சென்றுகொண்டிருப்பதாக, எனக்குத் தகவல் கிடைத்தது. அதனால் நாம், உடனடியாக சந்தேகநபர்களை காரைநகர் கடற்படைத் தளத்துக்கு அழைத்துச் சென்று, அங்கிருந்து வட்டுக்கோட்டை பொலிஸாரின் உதவியுடன், யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்துக்குக் கொண்டுசென்றே, சந்தேகநபர்களின் வாக்குமூலத்தைப் பதிவு செய்தோம்.

“மறுநாள், மஹர நீதவான் நீதிமன்றில் சாட்சியம் அளிக்கச் செல்லவேண்டி இருந்தமையால், நான் அங்கு சென்றுவிட்டேன். பின்னர் 20ஆம் திகதியன்று, இந்த வழக்கின் ஒன்பதாவது சந்தேகநபர், யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் இருந்து தப்பிச் சென்றவேளை, வெள்ளவத்தை பொலிஸ் நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார் எனவும் அவரின் பெயர் சுவிஸ் குமார் எனவும், எனது பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் உப பொலிஸ் பரிசோதகர் சொன்னார். அதன்போதே நான், ஒன்பதாவது சந்தேகநபர் பற்றி அறிந்துகொண்டேன்” என சாட்சியமளித்தார்.

“சடலத்தின் அருகில் இருந்து மீட்கப்பட்ட சான்றுப் பொருட்களான சைக்கிள், சப்பாத்து, பாடசாலை புத்தகப்பை, கிழிந்த பாடசாலை சீருடை, தலைப்பட்டி, கைக்குட்டை, கழுத்துப்பட்டி (ரை) உள்ளிட்ட சான்றுப் பொருட்களை அடையாளம் காட்ட முடியுமா?” என, பிரதி சொலிசிட்டர் ஜெனரல் கேட்டதற்கு, “ஆம்” எனச் சாட்சியளித்த சாட்சியம், அந்தச் சான்றுப் பொருட்களை அடையாளம் காட்டினார்.

“சந்தேகநபர்களைக் கைது செய்தவேளை, அவர்கள் வீட்டில் இருந்து மீட்கப்பட்ட ரீஷேர்ட் மற்றும் ஷேர்ட் உள்ளிட்டவற்றை அடையாளம் காட்ட முடியுமா?” எனக் கேட்டதற்கும், “ஆம்” என பதிலளித்த சாட்சியம், அவற்றையும் அடையாளம் காட்டினார்.

“நீங்கள் கைது செய்த எட்டு சந்தேகநபர்களையும் அடையாளம் காட்ட முடியுமா எனக் கேட்டதற்கு, “ஆம்” எனப் பதிலளித்து, ஒன்று தொடக்கம் எட்டு வரையிலான எதிராளிகளை அடையாளம் காட்டினார்.

“ஒன்பதாவது எதிராளியை அடையாளம் காட்ட முடியுமா?” எனக் கேட்டதற்கு, “நான் அவரைக் கைது செய்யவில்லை. அவரை நான் நீதிமன்றில் முற்படுத்தவும் இல்லை. சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரே, ஒன்பதாவது சந்தேகநபரைக் கைது செய்வதற்கான வீ அறிக்கையை, வெள்ளவத்தை பொலிஸாருக்கு தொலைநகலில் (பாக்ஸ்) அனுப்புமாறு கோரினார். இருப்பினும், சந்தேகநபர் தொடர்பான தகவல்கள் இல்லை என்பதால், அந்த அறிக்கையை அனுப்பவும் இல்லை” எனத் தெரிவித்தார்.

“இந்த சாட்சியாளர் சாட்சியம் அளிக்கும் முறையை, நீதிமன்றம் இதுவரை அவதானித்துக்கொண்டு இருந்தது. பிரதி சொலிசிட்டர் ஜெனரலின் பிரதான விசாரணையைக் குழப்பக்கூடாது எனும் நோக்குடனேயே, நீதிமன்றம் அமைதியாக இந்த சாட்சியத்தை அவதானித்தது.

“இந்த சாட்சியாளர், ஆரம்பத்தில் இருந்தே, ஒன்பதாவது சந்தேகநபர் தொடர்பில் கேட்டால் தெரியாது, நான் கைது செய்யவில்லை, நான் நீதிமன்றில் முற்படுத்தவில்லை என பதிலளித்து வருகிறார். ஒன்பதாவது சந்தேகநபர் தொடர்பில் கேட்டால், அதற்கு அவர் பதிலளிக்க விரும்பவில்லை. உண்மைகளை மறைக்கவும் முயல்கின்றார். உமக்கும் ஒன்பதாவது சாட்சியத்துக்கும் இடையில் ஏதேனும் பிரச்சினையா? என” நீதிமன்றம் அவரிடம்

வினவியது. அதற்கு, “இல்லை” என, சாட்சியாளர் பதிலளித்தார்.

“உமது பொலிஸ் நிலையத்தின் கீழ் உள்ள பகுதியில், ஒரு பெரிய சம்பவம் நடந்துள்ளது. அதனால், அந்தப் பகுதியில் அசாதாரண சூழ்நிலைகூட ஏற்பட்டுள்ளது. அந்தச் சம்பவம் தொடர்பிலான ஆரம்ப விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸ் அதிகாரியான நீர், எட்டு சந்தேநபர்களைக் கைது செய்துள்ளீர். ஆனால், ஒன்பதாவது சந்தேகநபர் பற்றி எந்த தகவலும் இல்லை.

“எட்டு சந்தேகநபர்களைக் கைது செய்துவிட்ட நிலையில் பிரச்சினை நடந்துகொண்டு இருக்கும் வேளை, மஹர நீதவான் நீதிமன்றில் சாட்சியம் அளிக்கவெனச் சென்றுள்ளீர்” என, குறித்த சாட்சியத்தை, கடுந்தொனியில் எச்சரித்த நீதிமன்றம், “அங்கு சென்று சாட்சியம் அளித்தீரா?” எனக் கேள்வியெழுப்பியது. அதற்கு இல்லை எனப் பதிலளித்த சாட்சியம், “ தான் அங்கே சாட்சி சொல்ல சென்று கொண்டிருந்த வேளை, எனது உயரதிகாரி, உடனே திரும்பி வருமாறு பணித்தார். அதனால், சாட்சியமளிக்கச் செல்லவில்லை” எனக் கூறினார்.

அதற்கு மன்று, “உமது உயரதிகாரிக்கு இருக்கும் அக்கறை உமக்கு இருக்கவில்லை. உமது பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் பிரச்சினை நடந்துகொண்டு இருக்கும் போது, அதனைக் கட்டுப்படுத்துவதற்குப் பொறுப்பாக இருக்க வேண்டிய நீர், பொறுப்பற்று நடந்துள்ளீர். உமது பொறுப்பற்ற செயலால் ஆத்திரமுற்றவர்கள் ஒன்று கூடி, யாழ்ப்பாணம் நீதிமன்றக் கட்டடத் தொகுதி மீது தாக்குதல் மேற்கொண்டார்கள். ஊர்காவற்றுறை நீதிமன்றில் முற்படுத்தாமல், சந்தேகநபர்களை யாழ்ப்பாணம் நீதிமன்றில் முற்படுத்த முயல்கின்றார்கள் எனும் வதந்தி பரவி தான், நீதிமன்றுக்கு முன்னால் கூடியவர்கள், நீதிமன்றக் கட்டடத் தொகுதி மீது தாக்குதல் மேற்கொண்டார்கள்” எனவும், நீதிமன்றம் கடுமையாக எச்சரிக்கை விடுத்தது.

“ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் இருந்து எப்போது இடமாற்றம் கிடைத்தது?” என மன்று வினவியது. அதற்கு பதிலளித்த சாட்சியம், “22. 05. 2015ஆம் ஆண்டு (மாணவி கொலை செய்யப்பட்டு ஒரு கிழமைக்குள்) இடமாற்றம் கிடைத்தது” என்றார்.

அதனைத் தொடர்ந்து, வழக்கு விசாரணைகளை மதிய போசன இடைவேளைக்காக மன்று ஒத்திவைத்தது. இன்றைய தினம் (05), குறித்த வழக்கின் முக்கிய சாட்சியங்களான சட்ட வைத்திய அதிகாரி மற்றும் இந்த வழக்கை விசாரணை செய்த குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸ் அதிகாரி ஆகியோரின் சாட்சியங்கள் பதிவு செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts