புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு: ஜூன் 12 முதல் விசாரணை

புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் படுகொலை வழக்கு விசாரணை, எதிர்வரும் ஜூன் மாதம் 12ஆம் திகதி முதல், யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில், மூன்று நீதிபதிகள் அடங்கிய ‘ட்ரயல் அட்பார்’ முறையில் இடம்பெறவுள்ளது.

குறித்த மாணவி படுகொலை தொடர்பான வழக்கு விசாரணைகள், நீதிவான் நீதிமன்றத்தால் முடிவுறுத்தப்பட்டு, சட்டமா அதிபரால், ஒன்பது சந்தேகநபர்களுக்கும் எதிரான 41 குற்றச்சாட்டுக்கள் அடங்கிய குற்றப்பத்திரம், யாழ். மேல் நீதிமன்றுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இம்மாணவியின் படுகொலை தொடர்பான வழக்கை, யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்திலேயே நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில், அதற்காக தமிழ் நீதிபதிகள் மூவரும், பிரதம நீதியரசரால் நியமிக்கப்பட்டனர்.

அதன் பிரகாரம் எதிர்வரும் பன்னிரன்டாம் திகதி, பிரதம நீதியரசரால் நியமிக்கப்பட்ட மூன்று தமிழ் நீதிபதிகளும், யாழ். மேல் நீதிமன்றத்தில் கூடவுள்ளனர். இதன்போது, சட்டமா அதிபர் சார்பில் பிரதி சொலிஸ்ர் ஜெனரல் குமார் ரட்ணம், வழக்கு தொடர்பான குற்றப் பகிர்வுப் பத்திரத்தை, உத்தியோகபூர்வமாக ‘ட்ரயல் அட்பார்’ நீதிமன்றில் தாக்கல் செய்வார்.

இதனைத் தொடர்ந்து, குறித்த குற்றப்பகிர்வுப் பத்திரமானது, சந்தேகநபர்களிடம், அவர்களுக்கு விளங்கும் மொழியில் வாசித்துக் காண்பிக்கப்பட்டு, அந்தக் குற்றப்பகிர்வுப் பத்திரமும் அதனூடான ஆவணங்களும், எதிராளிகளிடம் கையளிக்கப்படும்.

இதன்பின்னர், குறித்த வழக்கின் சாட்சிப் பதிவுகள் உள்ளிட்ட வழக்கு நடவடிக்கைகள், ஜூலை மாதத்தில் ஆரம்பிக்கப்படுவது தொடர்பான தகவல்கள், அன்றைய தினமே, யாழ். மேல் நீதிமன்ற ‘ட்ரயல் அட்பார்’ நீதிபதிகள் மூவராலும் அறிவிக்கப்படும்.

குறித்த வழக்கை விசாரணை செய்வதற்கு, வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலசிங்கம் சசிமகேந்திரன் தலைமையில், யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகம் இளஞ்செழியன் மற்றும் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த வழக்கு விசாரணை, ‘ட்ரயல் அட்பார்’ முறையில் கொழும்பில் நடைபெறவுள்ளதாக முன்னர் செய்தி வெளியாகி இருந்தது. அதனையடுத்து, இந்த வழக்கை யாழ்ப்பாணத்தில் நடத்த வேண்டும் என, மாணவியின் தாயார், ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பிரதம நீதியரசர் ஆகியோரிடம், கடிதம் மூலம் கோரிக்கை விடுத்திருந்தார். அதேவேளை, வழக்கு யாழ்ப்பாணத்தில் நடைபெற வேண்டும் எனக் கோரி யாழில் போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts