புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு விரைந்து முடிக்கப்படும்!

புங்குடுதீவு மாணவி கொலை வழக்குடன் தொடர்புடைய ஆவணங்கள், யாழ். மேல் நீதிமன்றில் பாரப்படுத்தப்படின் குறித்த வழக்கை தொடர் விசாரணைகள் மூலம் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுப்பேன் என, யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன், இன்று (05) தெரிவித்தார்.

இதேவேளை, குறித்த வழக்கு தொடர்பான குற்றப்பகிர்வு பத்திரம், எதிர்வரும் 12ஆம் திகதிக்கு முன்னர் யாழ். மேல் நீதிமன்றில் பாரப்படுத்தப்படுமென, அரச சட்டத்தரணி நாகரத்தினம் நிஷாந்த் மேல் நீதிமன்றில் தெரிவித்தார்.

குறித்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 9 சந்தேகநபர்களின் விளக்கமறியல் காலத்தை நீடிக்கக் கோரி, யாழ். மேல் நீதிமன்றில் மா.இளஞ்செழியன் முன்னிலையில், இன்று விசாரணை நடைபெற்றது.

இதன் போது சந்தேகநபர்கள் 9 பேரும் மன்றில் முற்படுத்தப்பட்டனர்.

குறித்த வழக்கு தொடர்பான குற்றப்பகிர்வு பத்திரம் மற்றும் ஆவணங்கள் என்பன எதிர்வரும் 12ஆம் திகதிக்கு முன்னர் மன்றில் பாரப்படுத்தப்படும். எனவே, எதிர்வரும் 22ஆம் திகதி வரையில் சந்தேகநபர்களின் விளக்கமறியல் காலத்தை நீடிக்குமாறு அரச சட்டத்தரணி கோரிக்கை விடுத்தார்.

அதனை தொடர்ந்து 4ஆம், 7ஆம் மற்றும் 9ஆம் சந்தேகநபர்கள் சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணி சரத் வல்கம, குறித்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தனது தரப்பினர்கள் இரு வருட காலமாக விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டு உள்ளனர். சந்தேகநபர்களை இரண்டு வருட காலத்துக்கு விளக்கமறியலில் தடுத்து வைக்க அனுமதி வழங்கும் அதிகாரம் மேல். நீதிமன்றுக்கு இல்லை. எனவே, 4 ஆம், 7ஆம் மற்றும் 9 ஆம் சந்தேகநபர்களை பிணையில் விடுவிக்க வேண்டுமெனக் கோரிக்கை விடுத்தார்.

இதேவேளை, குறித்த வழக்கின் முதலாவது சந்தேகநபர், எமது சார்பாக முன்னிலையாக யாழ்.மாவட்ட சட்டத்தரணிகள் எவரும் முன் வருகின்றார்கள் இல்லை. நாம் அன்றாடம் உழைத்து உண்பவர்கள். எமக்கு பெருமளவில் செலவு செய்து சட்டத்தரணிகளை ஏற்பாடு செய்ய முடியாது, என மன்றில் தெரிவித்தார்.

இது தொடர்பில் நீதிபதி மா.இளஞ்செழியன், குறித்த வழக்கின் குற்றப்பகிர்வு பத்திரம் மற்றும் ஆவணங்கள் பாரப்படுத்தப்பட்டால் தொடர் திகதியிட்டு விசாரணைகளை முன்னெடுத்து விரைவில் தீர்ப்பினை வழங்குவேன்.

இதேவேளை, மரண தன்டனை மற்றும் ஆயுள் தண்டனை குற்றங்களுக்கு சந்தேகநபர்களின் பிணை தொடர்பில் மேல் நீதிபதிக்கு தீர்மானிக்கும் அதிகாரம் உண்டு. எனவே, சந்தேகநபர்களை எதிர்வரும் 22ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

மாணவி, 2015ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் திகதி வன்புணர்வுக்குட்படுத்தி படுகொலை செய்யப்பட்டார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் 12 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு, வழக்கு விசாரணைகள் ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் இடம்பெற்று வருகின்ற நிலையில், 10ஆம் சந்தேகநபரான ஜெயவர்த்தன மற்றும் 12ஆம் சந்தேகநபரான ரவீந்திரன் ஆகிய இருவருக்கும் எதிராக சாட்சியங்கள் எவையும் இல்லாத காரணத்தால் சட்டமா அதிபர் திணைக்களத்தின் பரிந்துரைக்கு அமைய கடந்த 28ஆம் திகதி ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றத்தால் இருவரும் வழக்கிலிருந்து முழுமையாக விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related Posts