புங்குடுதீவு மாணவி கொலை: சந்தேகநபரின் பிணை கோரிக்கை நிராகரிப்பு

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் ஆவணங்கள் சட்டமா அதிபர் திணைக்களத்தில் ஒப்படைக்கப்பட்டு பரிசீலிக்கப்பட்டு வருகின்ற நிலையில், சந்தேகநபரை பிணையில் விடுவிப்பதற்கு யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் ஆட்சேபனை தெரிவித்துள்ளார்.

குறித்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபரின் விளக்கமறியல் காலத்தை நீடிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு, நேற்று (செவ்வாய்க்கிழமை) நீதிபதி மா.இளஞ்செழியன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போதே சந்தேகநபரின் பிணை கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய விசாரணையின் போது, பத்தாவது சந்தேக நபரான ஜயவர்த்தன ராஜ்குமார் மன்றில் முற்படுத்தப்பட்டார். அதன்போது சந்தேகநபரின் சார்பில் ஆஜரான சட்டத்தரணி, குறித்த நபர் மனநிலை குன்றியவர் என்றும் அவர் சாட்சியங்களை அச்சுறுத்தும் வகையில் செயற்பட கூடியளவில் உடல் வலிமை உடையவராக இல்லை என்றும் எனவே அவரை பிணையில் விடுவிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

ஆனால் சந்தேகநபர் தரப்பு சட்டடத்தரணியின் பிணை கோரிக்கைக்கு, பிரதி சொலிஸிட்டர் ஜெனரல் ஆட்சேபனை தெரிவித்துள்ளார்.

மேலும், குறித்த கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டுள்ள 12 சந்தேகநபர்களுள் ஒருவர் தற்போது அரச சாட்சியமாக மாறுவதற்கு சம்மதித்துள்ளார். அதவேளை குறித்த வழக்கு ஆவணங்கள் சட்டமா அதிபர் திணைக்களத்தில் ஒப்படைக்கப்பட்டு, ஆவணங்கள் பரிசீலனையில் உள்ளன. இந்நிலையில் சந்தேக நபரை பிணையில் விடுவிப்பது சிறந்ததல்ல எனக் குறிப்பிட்டுள்ளார்.

இரு தரப்பு வாதங்களை அடுத்து, சந்தேக நபரின் பிணை கோரிக்கையை நீதிபதி மா.இளஞ்செழியன் நிராகரித்ததுடன், அவரை எதிர்வரும் 2ஆம் திகதிவரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.

Related Posts