புங்குடுதீவு மாணவி கொலை : சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிப்பு

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கில் கடந்த வழக்கு தவணையின் போது நீதிமன்றினால் கோரப்பட்ட அறிக்கைகள் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதனால் அடுத்த தவணையில் அறிக்கைகளை சமர்ப்பிப்பதாக குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவு பொலிஸார், நீதவானிடம் நேற்று புதன்கிழமை (01) தெரிவித்தனர்.

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 12 சந்தேக நபர்களுக்கும் எதிரான வழக்கு, ஊர்காவற்துறை பதில் நீதவான் கருப்பையா ஜீவராணி, முன்னிலையில் நேற்று புதன்கிழமை (01) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது 12 சந்தேகநபர்களும் மன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கு விசாரணையின் போது, அடுத்த தவணையில் அறிக்கைகளை சமர்ப்பிப்பதாக குற்ற தடுப்பு புலனாய்வு பிரிவு பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து, 12 சந்தேகநபர்களையும் எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

மாணவி கடந்த 2015ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் திகதி வன்புணர்வுக்குட்படுத்தி படுகொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பில், இதுவரையில் 12 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு, வழக்கு விசாரணைகள் ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Posts