புங்குடுதீவு மாணவி கொலை: 11ஆவது சந்தேகநபர் துன்புறுத்தப்படவில்லை

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கில் அரச தரப்பு சாட்சியமாக மாறுமாறு 11ஆவது சந்தேகநபர் துன்புறுத்தப்படவில்லையென இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேற்படி கொலைச் சம்பவத்தில் தனது மகனான உதயசூரியன் சுரேஸ்கரனை (11 ஆவது சந்தேகநபர்) அரச தரப்புச் சாட்சியமாக மாறுமாறு குற்றப்புலனாய்வு பொலிஸார் துன்புறுத்துகின்றனர் என சந்தேகநபரின் தாயார் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண அலுவலகத்தில் கடந்த மார்ச் மாதம் 23 ஆம் திகதி முறைப்பாடு பதிவு செய்தார்.

முறைப்பாட்டின் பிரகாரம் கொழும்பு இலங்கை மனித உரிமைகள் ஆணையகத்தின் மூலம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டது. அரச தரப்புச் சாட்சியாக மாறுமாறு அவர் துன்புறுத்தப்பட்டாரா? என்பது தொடர்பில் விசாரணை செய்யப்பட்டு, துன்புறுத்தப்படவில்லையென்பது தெளிவுபடுத்தப்பட்டது. இந்த விடயம் முறைப்பாட்டாளருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2015 ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் திகதி கொலை செய்யப்பட்ட புங்குடுதீவு மாணவி தொடர்பில் இதுவரையில் 12 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன், வழக்கு ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Posts