சந்தேகநபர்கள் தாங்கள் எதனையும் தெரிவிக்க வேண்டும் என்றால் நீதிமன்றத்துக்குள் வைத்து தெரிவிக்க முடியும். அதனை விடுத்து, நீதிமன்றத்துக்கு வெளியில் சிறைச்சாலை வாகனங்களுக்குள் இருந்து கத்துவதால் எந்தப் பிரயோனசனமும் இல்லை’ என யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் கூறினார்.
புங்குடுதீவு மாணவியின் கொலை வழக்கில் கைதாகி, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 9 சந்தேகநபர்களின் விளக்கமறியல் காலத்தை மேலும் 3 மாதங்களுக்கு நீடிக்குமாறு சட்டமா அதிபர் திணைக்களத்தால் தாக்கல் செய்யப்பட்ட கோரிக்கை மனு மீதான விசாரணை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில்இன்று புதன்கிழமை (11) நடைபெற்ற போதே, நீதிபதி இளஞ்செழியன் இவ்வாறு குறிப்பிட்டார்.
‘நீதிமன்றத்துக்கு வெளியில் சந்தேகநபர்கள் கருத்துக் கூறுவதை நிறுத்த வேண்டும். சிறைச்சாலை வாகனங்களில் இருந்து கத்துவதில் எந்தப் பிரயோசனமும் இல்லை. இதனால், உங்களின் பிணை ரத்துச் செய்யப்படலாம். அத்துடன், சந்தேகநபர்களின் உறவினர்கள், பாதிக்கப்பட்ட குடும்பத்துடன் கதைப்பது அல்லது முரண்படுவதை நிறுத்த வேண்டும்’ என்றார்.
‘இந்த வழக்குத் தொடர்பில் நீதியையும் நியாயத்தையும் நிலைநாட்டவேண்டும். சந்தேகநபர்கள் தரப்பு நியாயங்களை வெளிக்கொண்டு வருவதற்கு, அவர்கள் சார்பில் ஆஜராவதற்கு சட்டத்தரணிகள் முன்வரவேண்டும். அது சட்டத்தரணிகளின் தனிப்பட்ட விடயம். அது தொடர்பில் அவர்களே சிந்திக்க வேண்டும்’ என்றார்.
மேலும், சந்தேகநபர்களின் பாதுகாப்பு முக்கியம். அது தொடர்பில் அநுராதபுரம் சிறைச்சாலை அதிகாரிகள் கவனத்திலெடுக்க வேண்டும். கடந்த வருடம் நடைபெற்றது போன்று மீண்டும் ஒரு கரும்புள்ளி நீதிமன்றத்துக்கு ஏற்படாத வகையில் நீதிமன்றத்தின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படவேண்டும்’ என நீதிபதி மேலும் கூறினார்.