புங்குடுதீவு மாணவியின் கொலை சந்தேக நபர்களுக்கு விளக்க மறியல் நீடிப்பு

யாழ். புங்குடுதீவு மாணவியின் கொலை வழக்கின் சந்தேகநபர்கள் 12 பேரின் விளக்க மறியல் எதிர்வரும் 19ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு இன்று (வியாழக்கிழமை) ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் பதில் நீதிவான் இ.சபேசன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, 12 சந்தேக நபர்களும் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதனையடுத்து குறித்த சந்தேக நபர்களை எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பதில் நீதவான் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.

இதேவேளை, 10 ஆவது சந்தேக நபரான ராஜ்குமார் தொடர்பான வழக்கு நேற்று (புதன்கிழமை) யாழ்.மேல் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது, குறித்த சந்தேக நபரின் விளக்கமறியல் காலம் 3 மாதத்திற்கு நீடிக்க வேண்டும் என சட்டமா அதிபரினால் அனுமதி கோரப்பட்டது.

இதனையடுத்து, குறித்த சந்தேக நபரின் விளக்கமறியல் காலம் 1 மாதமாக நீடிக்குமாறு யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் உத்தரவிட்டார்.

குறித்த சந்தேக நபர், தனக்கும் அந்த கொலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனவும் மாணவி வித்தியாவின் 45 நினைவு நாள் நிகழ்வில் கலந்துகொண்ட போதே தான் கைது செய்யப்பட்டதாகவும் கூறினார்.

Related Posts