நீதிமன்ற செயற்பாடுகளை விளையாட்டுத்தனமாக எடுக்க வேண்டாம். பொய் சொல்லவும் வேண்டாம். நான் மன்றில் தெரிவிக்காத தகவல்களை வெளியில் எவ்வாறு வெளியிடுவீர்கள்?’ இவ்வாறு ஊர்காவற்றுறை நீதிவான் ஏ.எம்.எம்.றியால், குற்றப்புலனாய்வு பொலிஸாரை கடுமையாக எச்சரிக்கை செய்தார்.
புங்குடுதீவு மாணவியின் கொலை வழக்கில் 10 சந்தேகநபர்களுக்கு எதிரான வழக்கு நேற்று திங்கட்கிழமை (25) நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே நீதிவான் இந்த எச்சரிக்கையை விடுத்தார்.
சந்தேகநபர் ஒருவரை கைது செய்யச் சொல்லி நீதிமன்றத்தில் நான் தெரிவிக்காத விடயத்தை எவ்வாறு வெளியில் சொன்னீர்கள் என குற்றப்புலனாய்வு பொலிஸாரை, நீதிவான் கடும் தொனியில் கேட்டார். அதற்கு குற்றப்புலனாய்வு பொலிஸார் மௌனம் காத்தனர்.
இது தொடர்பில் பொலிஸ்மா அதிபரிடம் விளக்கம் கோரவுள்ளதாக கூறிய நீதிவான், சந்தேகநபர் ஒருவரின் மனைவியுடன் குற்றப்புலனாய்வுப் பொலிஸார் கதைத்துக் கொண்டிருந்ததை தான் கண்டதாகவும், இந்த வழக்கு அப்பாற்பட்ட விடயங்களை தேவையில்லாத விடயங்களைச் செய்கின்றீர்கள் எனவும் நீதிவான் கூறினார். இதனையடுத்து, வழக்கை எதிர்வரும் மே மாதம் 9ஆம் திகதிக்கு நீதிவான் ஒத்திவைத்தார்.
2015ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் திகதி வன்புணர்வுக்குட்படுத்தி படுகொலை செய்யப்பட்ட புங்குடுதீவு கொலை வழக்குத் தொடர்பில் இதுவரையில் 12 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 10 சந்தேகநபர்களின் வழக்கு தனியாகவும், 2 சந்தேகநபர்களின் வழக்கு தனியாகவும் ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றது.
சம்பவம் நடைபெற்று 1 வருடமாகவுள்ள நிலையிலும் வழக்குத் தொடர்பான எவ்வித அறிக்கைகளும் நீதிமன்றத்தில் இதுவரையில் சமர்ப்பிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.