புங்குடுதீவில் பூசகர் கொலை; சந்தேக நபர்கள் மூவரும் கட்டுக்காவலில்

புங்குடுதீவு ஊரதீவு பாணாவிடை சிவன் ஆலய பூசகர் கொலையுடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட அவரது உதவியாளர் உள்ளிட்ட மூவரை வரும் ஒக்டோபர் 16ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க ஊர்காவற்றுறை நீதிவான் நிதிமன்றம் உத்தரவிட்டது.

கிளிநொச்சியைச் சேர்ந்த இராசையா இராசரூப சர்மா (வயது-32) என்ற ஊரதீவு பாணாவிடை சிவன் கோவில் பூசகர் கொலை செய்யப்பட்ட நிலையில் கடந்த சனிக்கிழமை அதிகாலை சடலமாக மீட்கப்பட்டார்.

சம்பவம் தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிஸாரும் யாழ்ப்பாணம் தடயவியல் பொலிஸாரும் இணைந்து விசாரணைகளை முன்னெடுத்தனர்.

அதனை அடுத்து சம்பவ இடத்தில் ஊர்காவற்றுறை நீதிவான் அந்தோனிப்பிள்ளை ஜூட்சன், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை சட்ட மருத்துவ அதிகாரி மயூரன் இணைந்து விசாரணைகளை முன்னெடுத்தனர்.

பூசகரின் பிடரியில் இரும்புக் கம்பியால் தாக்கியமையால் அவர் கொல்லப்பட்டார் என்று விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.

பூசகரின் உதவியாளரான விஸ்வமடுவைச் சேர்ந்த விதுஷன் மற்றும் சுழிபுரம் பாணாவெட்டையைச் சேர்ந்த ஆலய உதவியாளர்கள் இருவரும் ஊர்காவற்றுறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் பூசகரின் வீட்டிலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட சிசிரிவி கமரா பதிவின் வன்தட்டு (Hard Disk) உள்ளிட்ட பொருள்கள் மீட்கப்பட்டன.

சந்தேக நபர்கள் மூவரும் கொலைக் குற்றச்சாட்டின் கீழ் நேற்று ஊர்காவற்றுறை நீதிவான் முன்னிலையில் முற்படுத்தப்பட்டனர்.

அதன்போது சந்தேக நபர்கள் மூவரையும் விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டார்.

Related Posts