புகையிரத டிக்கட்டுக்களை கொள்வனவு செய்யும் வசதியை Hutch அறிமுகப்படுத்தியுள்ளது

இலங்கையில் அதிவிரைவாக வளர்ச்சிகண்டு வருகின்ற 3G வலையமைப்புக்களில் ஒன்றான Hutch, பெறுமதிமிக்க தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கிவரும் பெறுமதிசேர் சேவைகளில் மற்றுமொரு அம்சமாக Hutch கையடக்கத்தொலைபேசியூடாக நேரடியாக புகையிரத டிக்கட்டுக்களைக் கொள்வனவு செய்வதற்கு இடமளிக்கும் வகையில் மொபிடெல் மற்றும் இலங்கை புகையிரத திணைக்களம் ஆகியவற்றுடன் பங்குடமையை ஏற்படுத்தியுள்ளது.

தினசரி புகையிரதம் மூலமாக பயணிக்கும் 300,000 பிரயாணிகளுக்கு இச்சேவை ஒரு மகத்தான வரப்பிரசாதமாக அமைந்துள்ளதுடன், அவர்கள் தமது டிக்கட்டுக்களை கொள்வனவு செய்வதற்கு நீண்ட வரிசைகளில் கால்கடுக்க காத்திருக்க வேண்டிய அசௌகரியத்தை அகற்றி, தமது கையடக்கத்தொலைபேசியூடாக புகையிரத டிக்கட் முற்பதிவை மேற்கொள்ளும் வாய்ப்பை அவர்களுக்கு அளித்துள்ளது.

வாடிக்கையாளர்கள் தமது Hutch கையடக்கத்தொலைபேசியில் 365 இனை டயல் செய்து வாரத்தின் ஏழு நாட்களும், 24 மணி நேரமும் கிடைக்கப்பெறும் முற்பதிவு முகவரின் சேவையின் உதவியுடன் தமது முற்பதிவுகளை மேற்கொள்ள முடியும்.

டிக்கட்டுக்கான பணம் முறையான உறுதிப்படுத்தல்களின் பின்னர் கையடக்கத்தொலைபேசி நிலுவையிலிருந்து நேரடியாக கழிக்கப்படுவதுடன், SMS உறுதிப்படுத்தல் உடனடியாகவே வாடிக்கையாளருக்கு அனுப்பி வைக்கப்படும். முற்பதிவின் உறுதிப்படுத்தல் விபரங்களை புகையிரத நிலையத்திலுள்ள விசேட கருமபீடத்தில் சமர்ப்பித்து தமது டிக்கட்டுக்களை பெற்றுக்கொள்ள முடியும்.

கண்டி-கொழும்பு இன்டர்சிட்டி, வவுனியா இன்டர்சிட்டி, வவுனியா இரவு தபால், யாழ்தேவி, பதுளை இரவு தபால், உடரட்ட மெனிக்கே, பொடி மெனிக்கே மற்றும் ராஜதானி எக்ஸ்பிரஸ் அடங்கலாக முக்கிய புகையிரத மார்க்கங்களுக்கான விசேட புகையிரத ஆசன முற்பதிவு சேவை இதன் மூலமாகக் கிடைக்கப்பெறுகின்றது.

Hutch நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான திருக்குமார் நடராசா அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில் ´Hutch வாடிக்கையாளர்களுக்கு மிகவும் பெறுமதியான மற்றும் சௌகரியமான இந்த புகையிரத டிக்கட் பதிவு சேவையை வழங்குவதற்காக மொபிடெல் மற்றும் இலங்கை புகையிரத திணைக்களம் ஆகியவற்றுடன் Hutch இணைந்துள்ளமையையிட்டு நான் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளேன்.

கையடக்கத்தொலைபேசி வாடிக்கையாளர்களுக்கு சாத்தியமான வழிகளில் இத்தகைய பயன்பாட்டு சேவைகளை வழங்குவதை விஸ்தரிப்பதற்கு, மொபிடெல் போன்ற தொழிற்துறை முன்னணி நிறுவனங்களுடன் Hutch நெருக்கமாக இணைந்து செயற்பட்டு வருகின்றமைக்கு மற்றுமொரு உதாரணமாக இது அமைந்துள்ளது´ என்று குறிப்பிட்டார்.

மொபிடெல் நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் பிரிவிற்கான சிரேஷ்ட பொது முகாமையாளரான நளின் பெரேரா அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில் ´மொபிடெலின் mTicketing தளமேடையின் மூலமாக தொழிற்துறையில் உறுதியான பிணைப்புக்களை கட்டியெழுப்பி, சம்பந்தப்பட்ட ஏனைய அனைத்துத் தரப்பினருடனும் சிறந்த வியாபார உறவுமுறைகளை வளர்ப்பதற்கு எமக்கு இடமளிக்கும் வகையில் வாய்ப்பளிக்கும் புதிய பங்குடமையொன்றில் கால்பதித்துள்ளமையையிட்டு மொபிடெல் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளது.

புகையிரத டிக்கட் முற்பதிவு சேவை ஒரு முக்கியமான முன்னெடுப்பாக அமைந்துள்ளதுடன், mTicketing இனால் வழங்கப்படும் சேவைகளை தற்போது Hutch வாடிக்கையாளர்களும் பெற்று அனுபவிக்க முடியும்´ என்று குறிப்பிட்டார்.

பெறுமதிமிக்க தனது வாடிக்கையாளர்களின் உண்மையான தேவைகளை எப்போதும் இனங்கண்டு அவற்றிற்கு தீர்வளித்து வந்துள்ள Hutch, கையடக்கத்தொலைபேசி மூலமான வங்கிச்சேவை, காப்புறுதி மற்றும் e-channeling போன்று ஏற்கனவே Hutch வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும் ஏனைய சேவைகளுடன் தற்போது இந்த சேவையும் பெறுமதிமிக்க ஒரு கூடுதல் சேர்க்கையாக அமைந்துள்ளது.

Related Posts